KEY கொடுக்கும் ஜான்! சொதப்பி நிற்கும் விஜய்! கடுப்பில் ஆனந்த், ஆதவ்
கரூர் விவகாரத்தில் விஜய் மொத்தமாக சொதப்பி இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்து கொண்டு நிற்பதற்கு காரணமே ஜான் ஆரோக்கியசாமி தான் என சொல்கின்றனர். விஜய் எதற்கெடுத்தாலும் ஜான் ஆரோக்கியசாமி சொல்வதையே கேட்டு நடப்பதால் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவே நொந்து போய் இருக்கிறார்களாம்.
கரூர் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது விஜய்க்கு பேரிடியாக மாறியது. இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்தே விஜய்யின் நடவடிக்கைகள் தவெகவினருக்கே அப்செட்டை கொடுத்தது. சம்பவம் நடந்தவுடன் கரூருக்கு உடனடியாக செல்லாமல் தனி விமானத்தில் ஏறி சென்னை வந்தடைந்தார் விஜய். அதன்பிறகும் தாமதமாகவே வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதிலும் இந்த உயிர்கள் பறிபோனதற்கு விஜய் வருத்தம் தெரிவிக்க கூட இல்லையே என கடுமையான விமர்சனம் எழுந்தது.
கரூர் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் விஜய்யோ கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களோ கரூர் பக்கம் தலையே காட்டாமல் இருக்கின்றனர். என்ன தான் காரணம் சொன்னாலும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பக்க பலமாக விஜய் இருந்திருக்க வேண்டும் என்ற விமர்சனம் இருக்கிறது. அடுத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் ஆறுதல் சொல்லி வருகிறார் இபிஎஸ். இன்னும் விஜய்யுடன் WORK FROM POLITICS ஒட்டிக் கொண்டி இருப்பதாக எதிர் தரப்பினர் அட்டாக் செய்கின்றனர்.
இப்படி விஜய் அடுத்தடுத்து சொதப்புவதற்கு காரணமே கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தான் என சொல்கின்றனர். விஜயை கரூருக்கு போக வேண்டாம் என சொன்னதில் ஆரம்பித்து தற்போது நடக்கும் வீடியோ கால் ஐடியா வரை ஜான் ஆரோக்கியசாமி சொன்னதை செய்து தான் விஜய் மாட்டிக் கொண்டு முழிக்கிறாராம். விஜய் வெளியிட்ட வீடியோவின் பின்னணியிலும் ஜான் ஆரோக்கியசாமி தான் இருக்கிறார். அரசியல் பற்றி புரிதலே இல்லாமல் விஜய்க்கு தப்பு தப்பான யோசனைகளை ஜான் கொடுத்துக் கொண்டிருப்பதாக தவெகவினரே புலம்புகின்றனர்.
விஜய்யும் அது சரியா தப்பா என்று யோசிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு அவரது பின் செல்வதாக சொல்கின்றனர். இதனால் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. கரூருக்கு நீங்கள் வந்தே ஆக வேண்டும் அந்தப் பகுதி தவெக நிர்வாகிகள் விடாப்பிடியாக இருக்கும் போது ஜான் முட்டுக்கட்டை போட்டு வருவதால் அவர்களும் கோபத்தில் இருப்பதாக சொல்கின்றனர்.
ஏற்கனவே ஆதவ் அர்ஜூனா ஜான் ஆரோக்கியசாமி இடையே பனிப்போர் நடந்து வந்த நேரத்தில் கரூர் விவகாரத்தில் 2 பேருக்கும் விரிசல் அதிகரித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமியிடம் விஜய் ஆன்லைனில் மீட்டிங் ஒன்றையும் நடத்தியதாக சொல்கின்றனர்.
அரசியல் அனுபவம் கொண்டவர்களை கட்சிக்குள் சேர்க்காமல் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா போன்றவர்களை மட்டும் நம்பி அரசியல் செய்தால் விஜய்யின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.