Trichy Suriya on Annamalai | விரைவில் அண்ணாமலை FILES பகீர் கிளப்பும் திருச்சி சூர்யா பரபரக்கும் தமிழக பாஜக
திமுக செய்ததாகக் கூறப்படும் ஊழல்கள் அடங்கிய விவரங்களை DMK Files-3 என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தயாரான நிலையில், அண்ணாமலை செய்ததாகக் கூறப்படும் ஊழல்கள் அடங்கிய விவரங்களை அண்ணாமலை Files-1 என்ற பெயரில் திருச்சி சூர்யா வெளியிடுவதாக தெரிவித்துள்ளது பாஜக தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்தவரின் மகன் பாஜகவில் இணைந்தது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.திருச்சி சூர்யா பாஜக பெண் நிர்வாகி டெய்சி சரணுடனான கருத்து மோதலின் போது அவரை ஆபாசமாக பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதைத் தொடர்ந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யா 6 மாதத்துக்கு நீக்கப்பட்டார். பின்கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் திருச்சி சூர்யா பாஜகவில் சேர்க்கப்பட்டதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மற்றும் சூர்யா சிவா பேசும் ஆடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைமையை விமர்சித்த தமிழிசையை கடும் விமர்சனம் செய்திருந்தார் திருச்சி சூர்யா. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தை அண்ணாமலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 3 மாதங்கள் கழித்து திமுக ஃபைல்ஸ் இரண்டாவது பாகத்தை வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், DMK Filesஇன் மூன்றாவது பாகத்தை முழுவதுமாக ஜனவரி மாதம் வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் திருச்சி சூர்யா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலை பைல்ஸ்-1 வெளியிடப்படும். இதில் நானே என் தனிப்பட்ட முயற்சியில் சேகரித்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன். ஊழலை ஒழிப்பேன் என்ற பெயரில், ஊழல் பேர்வழிகளிடம் மிரட்டி பணம் பறித்து சொத்து சேர்த்த விவரங்கள் மற்றும் அண்ணாமலையை அண்டி பிழைத்து சமீபத்தில் பணக்காரர்களான அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவரங்கள் இந்த ஃபைல்சில் கண்டிப்பாக இடம்பெறும் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளது பஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.