Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு
அண்ணாமலைக்காக அதிமுகவிடம் அமித்ஷா ராஜ்யசபா சீட் கேட்ட போது, அண்ணாமலைக்கெல்லாம் ராஜ்யசபா சீட் கொடுக்க முடியாது என இபிஎஸ் கறாராக சொல்லி விட்டதாக பேச்சு அடிபடுகிறது. இபிஎஸ்-ஐ சரிகட்ட முடியாத பாஜக தலைமை வேறு வழியில்லாமல் சந்திரபாபு நாயுடு பக்கம் திரும்பியுள்ளதாக சொல்கின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர் பதவிக்காலம் கடந்த வருடம் ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை பாஜக அறிவித்தது. மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையையே பாஜக தேசியத்தலைமை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த அண்ணாமலை ஆதரவாளர்களிடம் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள் இனி தமிழ் நாட்டில் பாஜகவின் நிலமை கடந்து காலங்களைப் போல் மாறிவிடும் என்றும் புலம்பினார்கள்.
அவர்களை சமாதானப்படுத்தும் முனைப்பில் அமித்ஷா, அண்ணாமலையின் அரசியல் அறிவை தேசிய அளவில் பயன்படுத்துவோம் என்றும் அவருக்கு தேசிய அளவில் ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். ஆனால், இது அண்ணாமலைக்கு திருப்திகரமானதாக இல்லை என்று தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எம்.பி பதவி அல்லது மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இச்சூழலில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அதிமுகவிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-யிடம் தாங்களுக்கு இருக்கும் ராஜ்ய சபா சீட் ஒன்றை அண்ணாமலைக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இபிஎஸோ, “கடந்த காலங்களில் எங்கள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து மோசமாக விமர்சனம் செய்த அண்ணாமலைக்கு எப்படி ராஜ்யசபா சீட் கொடுக்க முடியும். அப்படி கொடுத்தால் எங்கள் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அதானால் அண்ணாமலைக்கு நிச்சயம் ராஜ்யசபா சீட் கொடுக்க முடியாது” என்று கரராக இபிஎஸ் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரை தமிழ் நாட்டில் இருந்து எம்.பி ஆக்கி விடலாம் என்ற முனைப்பில் இருந்த பாஜகவிற்கு இபிஎஸ்-ன் இந்த பதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. கூட்டணியில் இருப்பதால் இதனால் கூட்டணிக்குள் எந்த வித பிரச்சனையும் வந்த விடக்கூடது என்று ஆந்திராவிற்கு ரூட்டை மாற்றியுள்ளாராம் அமித்ஷா. அந்தவகையில் சந்திரபாபு நாயுடுவிடம் அண்ணாமலைக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குவது குறித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் சந்திரபாபு நாயுடுவும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அண்ணாமலை நாடாளுமன்றம் செல்வது உறுதி என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.