Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்

திருப்பூரில் மதுபோதை ஆசாமிகள் 5 பேர் நள்ளிரவில் பேக்கரிக்கு சென்று டீ கேட்டு தகராறு செய்ததுடன் பேக்கரி ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவு பகுதியில் பொன்ராஜ் என்பவர் சொந்தமாக பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவில் பொன்ராஜின் பேக்கரிக்கு மது போதையில் சென்ற 5  பேர் கடையில் இருந்த இனிப்பு மற்றும் கார வகைகளை எடுத்து சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கடை ஊழியரிடம் டீ கேட்டுள்ளனர். நேரமாகிவிட்டதால் டீ இல்லை என கூறியுள்ளனர். 

இதனால் மது போதையில் இருந்த வாலிபர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சாப்பிட்ட தின்பண்டங்களுக்கு பணம் கொடுத்து செல்லுமாறு பேக்கரி ஊழியர் கூறியுள்ளார். அதற்கு டீ  இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் அப்புறம் எதற்கு பணம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மது போதையில் இருந்த வாலிபர்கள் கடைக்குள் சென்று கடை ஊழியர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரை கீழே தள்ளிவிட்டு காலால் எட்டி உதைத்தும் தாக்கியுள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் வாலிபர்கள் மதுபோதையில் இருந்ததால் அவர்கள் வந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வாலிபர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் அதனை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பேக்கரி ஊழியரை மதுபோதை ஆசாமிகள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola