Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்
மதுவை ஒழிப்போம் என சூளுரைத்த விசிக தலைவர் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு மது விற்பனையை குறைக்க வேண்டும் என அந்தர்பல்டி அடித்துள்ளார். அந்த 10 நிமிட சந்திப்பில் திருமாவளவன் மிரட்டப்பட்டதாக விவாதத்தை பற்றவைத்துள்ளனர் எதிர்க்கட்சிகள்.
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அக்டோபர் 2ம் தேதி நடக்கும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் சொன்னது கூட்டணிக்குள் குழப்பமா என பரபரப்பை கிளப்பியது. அதுவும் கூட்டணியில் இருக்கும் ஒருவரே திமுக அரசு நினைத்தால் மதுவை ஒழிக்கலாம் என அழுத்தம் திருத்தமாக சொன்னது 2 கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதுவும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அதிர வைத்தார் திருமா. ஆனால் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது, அட்மின் தான் திருமாவுக்கு தெரியாமல் பதிவேற்றம் செய்தார் என்றெல்லாம் விவாதங்கள் சுற்றி வலம்வந்தன.
மது ஒழிப்பு மூலம் கூட்டணி உறவில் சிக்கலே வந்தாலும் கவலையில்லை என கர்ஜித்த திருமா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு அதில் இருந்து பின்வாங்கினாரா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மதுக்கடைகளை மூடியே ஆக வேண்டும் என விடாப்பிடியாக நின்ற திருமா, சந்திப்புக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும் என ட்விஸ்ட் கொடுத்தார்.
முதல்வரை சந்திப்பதற்கு முன்னால் திருமா மிரட்டிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அங்கே போன பிறகு ஸ்டாலின் மிரட்டியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை. அந்த 10 நிமிட சந்திப்பில் ஸ்டாலினும், திருமாவும் தனியாக சந்தித்து பேசியதாகவும், பொது வெளியில் இப்படி பேசியது சரியா என ஸ்டாலின் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகளும், காவல்துறையினரும் மற்ற கட்சிகளை எல்லாம் விட்டுவிட்டு விசிகவின் கொடிக்கம்பங்களை மட்டும் அகற்றுவதாக திருமாவும் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது தொடர்பாக முதல்வரிடம் திருமா எதுவும் பேசவில்லை என சொல்லியிருப்பது விசிகவினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வரை சந்தித்த பிறகு திருமாவளவனின் பேச்சில் தடுமாற்றம் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.