CM வேட்பாளர் தேஜஸ்வி! DEPUTY CM-ல் வைத்த ட்விஸ்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
பீகாரில் இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக்க ராகுல்காந்தி முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். அதோடு சேர்த்து 3 பேரை துணை முதலமைச்சர் ஆக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதிலும் பக்காவான ஒரு ப்ளான் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது பீகார். 243 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியும், பிரசாந்த் கிஷோர் தனித்து என மூன்று அணிகளாக களத்தில் மோதுகின்றனர்.
இதில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர். லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 135ல் இருந்து 140 இடங்களும், காங்கிரஸுக்கும் 50ல் இருந்து 52 இடங்களும் ஒதுக்க முடிவாகியுள்ளதாக தெரிகிறது. கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறையும் அதே அளவு தொகுதிகளை காங்கிரஸ் கேட்டதால் இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியில் 50 இடங்களுக்கு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளது.
அடுத்ததாக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தது. தேஜஸ்வி யாதவ் தான் முதல்வர் வேட்பாளர் முகமாக இருக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் விரும்பினர். ஆனால் அதற்கு பீகார் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது தேஜஸ்வி யாதவையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூட்டணி சார்பில் முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. தேஜஸ்வி யாதவ் 2 முறை பீகார் துணை முதலமைச்சராக இருந்துள்ளார். இந்த முறை நிதிஷ் குமார் ஆட்சியை வீழ்த்தி முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து விட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் தேஜஸ்வி.
அதோடு சேர்த்து இந்த கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில் 3 துணை முதலமைச்சர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளனர். தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் இஸ்லாமியர் என 3 பேரை துணை முதலமைச்சர் இருக்கையில் அமர்த்த காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் கைகொடுத்துள்ள நிலையில், அதனையொட்டி இந்த முடிவை இந்தியா கூடட்ணியினர் எடுத்துள்ளனர்.