Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?
பாஜகவை சேர்ந்தவங்களே என்னைய விமர்சனம் பண்றாங்க, ஒருத்தருக்கொருத்தர் விமர்சனம் பண்ணி சோசியல் மீடியாவுல பேசுறாங்க என்று தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக தமிழிசை கட்சியின் மேலிட பொறுப்பாளரிடமே நேரடியாக சொல்லியுள்ளார். அண்ணாமலையும் கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழிசை இப்படி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக- பாஜக கூட்டணி இருந்திருந்தால் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்காது, ஆனால் அந்த கூட்டணி அமைப்பதில் சகோதரர் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என்றும் உடைத்து பேசினார் தமிழிசை. இது அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசையை சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கினர். கட்சியின் தலைவர்களை தவறாக எழுதினால் முன்னாள் மாநில தலைவர் என்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார் தமிழிசை.
தமிழக பாஜகவில் நடந்த உட்கட்சி மோதல் டெல்லி தலைமை காதுக்கு சென்றதாகவும், தமிழக தலைவர்கள் பார்த்து பேசுமாறு கண்டித்ததாகவும் கூறப்பட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித்ஷா முகத்தை கோபமாக வைத்து தமிழிசையை கண்டிப்பது போல பேசியிருந்தார். இதனை வைத்தும் அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசையை ரவுண்டுகட்ட ஆரம்பித்தனர். இறுதியில் அமித்ஷா தன்னிடம் தேர்தல் தொடர்பாக பேசியதாக முற்றுப்புள்ளி வைத்தார் தமிழிசை.
இந்தநிலையில்தான் மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதல்முறையாக பாஜக மையக்குழு கூட்டம் இன்று கூடியது. அண்ணாமலை, தமிழிசை, ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், நயினார், எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை பல்வேறு புகார்களை போட்டு உடைத்துள்ளார்.
பாஜகவை சேர்ந்தவர்களே தன்னை விமர்சிப்பதாகவும், பாஜக நிர்வாகிகளே ஒருவரையொருவர் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதாகவும் புகார்களை அடுக்கியதாக கூறப்படுகிறது. கட்சியில் சிலர் வளர வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தாக்கி பேசக்கூடாது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தமிழிசைக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், கூட்டத்தில் அண்ணாமலையை வைத்து கொண்டே தமிழிசை இந்த புகாரை சொல்லியுள்ளது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஏற்கனவே அண்ணாமலையின் வார் ரூம் ஆட்கள் தமிழிசையை விமர்சித்து பதிவிடுவதையெல்லாம் தமிழிசை ஆதரவாளர்கள் ரிப்போர்ட்டாக தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் அண்ணாமலை, தமிழிசை தரப்பு இடையே மோதல் முற்றி வரும் நிலையில் டெல்லி தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.