TN Cabinet Reshuffle | தேதி குறித்த ஸ்டாலின்! சிக்கலில் சீனியர்கள்? அறிவாலயம் EXCLUSIVE
இன்று நடக்கும், நாளை நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த தமிழக அமைச்சரவை மாற்றம் இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. வரும் 19ஆம் தேதி நிச்சயமாக அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பு வரும் என்று அடித்துச் சொல்கிறது அறிவாலய வட்டாரம். ”இந்த முறை நடைபெறவுள்ள இலாக்கா மாற்றத்தில் சில சீனியர் அமைச்சர்களுக்கும் சிக்கல் வரலாம் என்று கூறப்படுகிறது”
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 22ஆம் தேதி வெளிநாடு செல்லவுள்ளார். அவர் புறப்படுவதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்துவிட்டு, வெளிநாடு செல்லலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் அதற்கான நாளாகதான் வரும் 19ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022ஆம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றார். அப்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் ஒரு சர்ச்சையில் சிக்க, அவரிடம் இருந்த போக்குவரத்து துறையை சிவசங்கருக்கும், அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இதுதான், முதன்முதலாக நடந்த அமைச்சரவை மாற்றம்.
இரண்டாவது முறையாக செய்யப்பட்ட மாற்றத்தில் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், ராமசந்திரன், மதிவேந்தன், மெய்யநாதன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. புதிதாக உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு முதல்வரிடம் இருந்த சிறப்பு திட்ட செயலாக்கத்துறை பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டு முக்கியத்துவம் தரப்பட்டது.
2022ஆம் ஆண்டி டிசம்பரில் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்படி, டி.ஆர்.பி ராஜா புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதோடு, தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு நிதித் துறை அமைச்சராகவும், பிடிஆர் பழனிவேல்ராஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டனர். மனோ தங்கராஜூவுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி இதுவரை மூன்று முறை தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வரும் 19ஆம் தேதி 4வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடமும் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. அதோடு, அமைச்சர் பொன்முடி சொத்து வழக்கில் குற்றாவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டபோது அவரிடம் இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த முறை மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் ஒரு சிலர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சிலர் சேர்க்கப்படலாம் என்றும் பலரது இலாக்காக்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதவி உயர்த்தப்படுவது உறுதியாகியிருக்கிறது.
அதோடு, மீண்டும் ஆவடி நாசருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக உள்ள கயல்விழி செல்வராஜ் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி அமைச்சர் ஆக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சில அமைச்சர்களிடம் கூடுதலாக உள்ள பொறுப்புகளை புதியவர்களை அமைச்சரவையில் சேர்த்து அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்றும் முதல்வர் ஆலோசித்திருப்பதாக செனடாப் சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், சில மூத்த அமைச்சர்கள் மீது முதல்வர் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் சீனியர்கள் கையில் வைத்துள்ள முக்கியமான துறைகள் பறிக்கப்பட்டு டம்மியான துறைகள் அவர்களுக்கு மாற்றி வழங்கப்படலாம் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், ராஜகண்ணப்பன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு புதிய துறைகள் வழங்கப்படலாம் என்றும் அமைச்சர்கள் ரகுபதி, மதிவேந்தன், முத்துசாமி, சக்கரபாணி உள்ளிட்டோருக்கு துறைகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.