Suresh Gopi vs Amit Shah | சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு! பறிபோகும் அமைச்சர் பதவி?அதிருப்தியில் அமித்ஷா
சினிமாவில் நடிக்க அமித்ஷா அனுமதி அளிக்கவில்லை என்றால், சினிமா வாழ்க்கைக்காக அமைச்சர் பதவியை துறக்க தயார் என பாஜக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற நடிகர் சுரேஷ் கோபி தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கேரள பிலிம் சேம்பரின் சுரேஷ் கோபிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது பேசிய சுரேஷ் கோபி, திரைப்படங்களில் நடிப்பதற்காக மத்திய அமைச்சர் பதவியை துறக்க தான் தயார் என தெரிவித்தது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அங்கு அவர் பேசியதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நான் தற்போது 22 படங்களில் நடித்து வருவதாக தெரிவித்தேன், அதனால் தான் தொடர்ந்து படங்களில் நடிக்க அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளேன். ஒருவேளை அவர் அனுமதி வழங்கினால், செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் ஒத்த கொம்பன் பட சூட்டிங்கை தொடங்க தயார் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தான் ஒரு மத்திய அமைச்சர் என்பதால் தன்னுடன் எப்போதும் 4 அரசு அதிகாரிகள் உடனிருப்பர். எனவே அவர்களுக்கான செலவையும் படக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அமைச்சரவை பணிகளும் பாதிப்பின்றி நடக்கும் என நிபந்தனை விதித்திருந்தார்.
மேலும், சினிமாவில் நடிக்க முடியாமல் போனால் தன்னால் வாழவே முடியாது எனவும் சினிமாவுக்காக மத்திய அமைச்சர் பதவியை துறக்கவும் தயார் என அதிர்ச்சி கொடுத்தார்.
சுரேஷ் கோபியின் இந்த பேச்சு பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்கள் பிற பணம் ஈட்டும் செயல்களில் ஈடுபட கூடாது என்ற விதி பாஜகவில் உள்ளதால் சுரேஷ் கோபிக்கு விலக்கு அளித்தால் அது கட்சியின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கருதுகின்றனராம். எனவே சுரேஷ் கோபியை விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு வருகிறது.