Siddaramaiah CM issue : சவால்விட்ட சித்தராமையா! கடுப்பில் காங்கிரஸ்! WARNING யாருக்கு?
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ராஜினாமா செய்யப் போகிறாரா என காங்கிரஸ் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படும் நேரத்தில், என்னை அதிகாரத்தில் இருந்து நீக்குவது நடக்கவே நடக்காது என சவால்விட்டுள்ளார் சித்தராமையா.
கர்நாடகாவின் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்த நிலையில் இந்த விவகாரத்தை வைத்து சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என ரவுண்டுகட்டி வருகிறது பாஜக. சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார்.
சிட்டிங் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கும் அதிருப்தியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து காங்கிரஸுக்கு படையெடுத்து வருகின்றனர். சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கும் நிலையில், இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்குமோ என காங்கிரஸ் தலைமையும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கர்நாடகாவில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் சிலர் சித்தராமையாவுக்கு எதிராக இருப்பதால் அவர்களும் உள்ளடி வேலைகளை பார்ப்பதாக கூறப்படுகிறது. சித்தராமையா பதவியில் இருந்து நீக்கப்பட்டால் டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்திலும் பேச்சு இருக்கிறது. சித்தராமையா தான் முதலமைச்சராக தொடர்வார் என டி.கே.சிவக்குமாரும் அடித்து சொன்னார்.
இந்தநிலையில் ராஜினாமா தொடர்பாக நாளுக்கு நாள் பேச்சு தீவிரமாகி வரும் நிலையில், அதுதொடர்பாக சித்தராமையாவே பதில் கொடுத்துள்ளார். பாஜகவினர் தனக்கு எதிராக என்ன சதித்திட்டம் போட்டாலும், மக்களின் ஆதரவு இருக்கும் வரை தன்னை முதலமைச்சர் இருக்கையில் இருந்து யாரும் நீக்க முடியாது என ஆவேசமாக பேசியுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பதவிக்கு வந்ததால் பாஜகவினருக்கு பிடிக்காமல் தான் தேவையில்லாத புரளிகளை பரப்புவதாக கூறியுள்ளார். பாஜகவினருக்கு மட்டுமல்லாமல் தனக்கு எதிராக காங்கிரஸில் குரல் கொடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்துதான் சித்தராமையா பேசியதாக கர்நாடகா வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.