Shobha Karandlaje : இப்படி பண்ணலாமா மோடி?கொந்தளிக்கும் தமிழர்கள்" இவரா உங்க அமைச்சர்?"

Continues below advertisement

தமிழ்நாட்டில் இருந்து வந்து பெங்களூருவில் குண்டுவைத்து விட்டு செல்கிறார்கள் என தமிழர்களை அவதூறாக பேசிய ஷோபா கரந்த்லாஜேவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரன் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முசாவீர் ஷபிர் உசேனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே கடந்த மார்ச் மாதம் மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேசிய விஷயங்கள் சர்ச்சையில் சிக்கியது. தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்துள்ளனர் என அவர் கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

எந்த ஆதாரமும் இல்லாமல் தமிழர்கள் மீது அவர் இப்படி குறை சொல்லலாமா என எதிர்ப்புக் குரல் எழ ஆரம்பித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘பாஜக இணையமைச்சரின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனம். இப்படி சொல்வதற்கு அவர் என் ஐ ஏ அதிகாரியாகவோ அல்லது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு நெருங்கிய தொடர்புடையவராகவோ இருக்க வேண்டும். அவருக்கு இப்படி பேசுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் எதிர்ப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் முதல் பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விமர்சித்திருந்தார்.

எதிர்ப்பு குரல் வந்த பிறகு ஷோபா கரந்த்லாஜே தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். மேலும் தனது கருத்துகளை திரும்பப்பெறுவதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஷோபா கரந்த்லாஜேவுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை 2 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதனால் கட்சியிலும் அவருக்கு செல்வாக்கு இருப்பதால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்களை தரக்குறைவாக பேசிய ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதா என சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். தமிழர்கள் தொடர்பாகவும், தமிழ் மொழி தொடர்பாகவும் தொடர்ந்து பெருமையாக பேசி வரும் மோடி, ஷோபா கரந்த்லாஜேவுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என விமர்சித்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram