Senthil balaji bail : செந்தில் பாலாஜிக்கு ஜாமின்? ஆர்வத்தில் திமுகவினர்
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா என திமுகவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. தொடர்ந்து முயற்சித்தும் அவருக்கு ஜாமின் கிடைக்காத நிலையில், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதை சுட்டிக்காட்டியும் ஜாமின் கேட்கப்பட்டு வருகிறது.
ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் மனு கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி என இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டது. பின்னர், இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் வாதங்களை ஏற்கனவே நீதிபதிகள் கேட்டுவிட்டதால் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சிறையில் இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் சில முக்கிய முடிவுகளை இன்றளவும் செந்தில் பாலாஜியே எடுப்பதாகவும், திமுக தலைமையும் அவர் கைகாட்டும் நபர்களையே தேர்தல்களில் நிறுத்துவதற்கு டிக் அடிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. அதனால் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள திமுகவினர் செந்தில் பாலாஜியின் ஜாமினை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்