Selvaperunthagai | ”கழிவறையில் சாப்பாடு! புழு, மரவட்டை!” செல்வப்பெருந்தகை ரெய்டு! கதறிய வார்டன்!
டைம்லாம் கொடுக்க முடியாது, சஸ்பெண்ட் பண்ணாதான் சரியா வரும் என மாணவர்கள் தங்கும் விடுதியில் ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை அதிகாரிகளிடம் ரெய்டு விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை பொது கணக்கு குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் 8 எம்எல்ஏக்கள் அடங்கிய குழுவினர் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது மயிலாடுதுறையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாணவர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டனர்.
அங்கு இருந்த கழிவறை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்து இருந்ததை கண்டு அதிகாரிகளை அழைத்து சரமாரியாக கேள்வி எழுப்பி கடிந்து கொண்டார். பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிய நிலையில் கட்டிடம் தரமான முறையில் உள்ளதா என்று தரச் சான்று வாங்கினீர்களா என்று கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சபீர் ஆலமிடம் அதிகாரிகள் பொறுப்பின்றி செயல்படுவது சரியா என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து சமையல் கூடத்தை பார்வையிட்ட குழுவினர் அங்கும் சுகாதாரமற்ற முறையில் சமைப்பதற்கான பொருட்களை வைத்திருந்ததை பார்த்து கோபமாக பேசினர். மேலும் அரசியலமைப்பு தந்தை அம்பேத்கர் படத்தை கூட ஒழுங்காக வைக்கவில்லை என்று திட்டி தீர்த்த செல்வப் பெருந்தகை விடுதி சமையலர், வார்டன் பொறியாளர் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நால்வரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தார். டைம் கொடுங்க என அவர்கள் கேட்ட போதும், அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் செல்வப்பெருந்தகை.
இதுபோன்று சஸ்பெண்ட் செய்தால் தான் தமிழகத்தில் பணியை ஒழுங்காக செய்யாமல் அலட்சியமாக செய்யும் அதிகாரிகளுக்கு பாடமாக அமையும் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.