Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்
தன்னுடைய ஒவ்வொரு மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் அறிக்கைகள் மூலமாகவும் திமுகவையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிவாளம் போடும் வகையில், அவர் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை ராஜினாமா செய்ய வைக்கும் அசைன்மெண்ட் தமிழக உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.”விரைவில் சீமானுக்கு நெருக்கமாக உள்ள நபர்கள் மீது புதிய வழக்குகளை பதிவு செய்வதற்கான பின்னணி வேலைகளை உளவுத்துறையினர் பார்த்து வருவதாக கூறப்படுகிறது”
சீமானின் செயல்பாடுகள், அவரது நடவடிக்கைகளில் ஜனநாயகம் இல்லை நானே கட்சி, இருப்பவர்கள் இருங்கள் வெளியேற நினைப்பவர்கள் செல்லுங்கள்என்ற தொனியிலும் சீமான் பேசி வருவதால், ஏற்கனவே, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் நாம் தமிழர் தொண்டர்களுடன் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், அவர் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குறி வைத்து கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வருவதை கண்ட திமுக தலைமை நாம் தமிழர் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சீமான் கட்சி நிர்வாகிகள் காளியம்மாள், வெண்ணிலா உள்ளிட்ட பெண்களையும் ஆண் நிர்வாகிகளையும் தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டதற்கு பின்னணியிலும் தமிழக உளவுத்துறையின் நடவடிக்கைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட இன்னும் பல ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், ஆவணங்கள் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சீமான் தொடர்ந்து திமுகவை தமிழ்நாடு அரசையும் விமர்சித்து பேசி வந்தால், தேர்தல் நெருக்கத்தில் அவைகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக பொதுவெளியில் வெளியிடவும் அவர்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிகிறது.
அதே நேரத்தில் சீமானுக்கு மிக நெருக்கமாக இருக்கும் கட்சி நிர்வாகிகள், அவரது நண்பர்கள், நிதி உதவி செய்யும் தொழிலதிபர்கள் இவர்களையெல்லாம் குறி வைத்து அடுத்தடுத்து வழக்குகளை போட தமிழக உளவுத்துறை மூலம் அவர்கள் குறித்த பின்னணி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
விரைவில் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை குறி வைத்து புதிய, புதிய வழக்குகள் பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில், வேறு வகையிலும் சீமான் மீது அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளை ராஜினமா செய்ய வைத்து, அவர்களை வேறு கட்சிக்கு மடைமாற்றும் நடவடிக்கைகளும் நடக்கப்போகும் நாட்களும் வெகுத்தொலைவில் இல்லை என்று காவல்துறை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இந்த தகவல் வெளியான பின்னர், எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற ரீதியில் சீமான் உள்ளிட்டவர்கள் இருப்பதாகவும், ஆனால், சில நிர்வாகிகள் நமக்கு எதற்கு வம்பு என்று நாம் தமிழர் கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் முடிவை எடுக்கலாமா என்று ஆலோசித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.கட்சித் தொடங்கியதில் இருந்து தனித்து நின்று தன்னுடைய வாக்கு சதவீதத்தை அதிகரித்து காட்டி வரும் சீமான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டி என்பதையே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.