Savukku Shankar Arrest |தேவர் குறித்து அவதூறு..சவுக்கு சங்கர் மீண்டும் கைது! அதிரடி காட்டும் போலீஸ்

பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைபட்டு இருக்கும் சவுக்கு சங்கருக்கு ஒவ்வொரு வழக்கிலும் அடுத்தடுத்து ஜாமின் கிடைத்து வரும் நிலையில், சவுக்கின் சிறைவாசம் முடிவுக்கு வருகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு வழக்கில் சிக்கி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார் சவுக்கு..

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். 

கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு விசாரணை, கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் சவுக்கு மற்றும் அவரது நன்பர் ஃபெலிக்ஸ் ஆகிய இருவர் மீதான குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது. பின்னர் இருவருக்கும் 55 பக்க குற்றப்பத்திரிகை நகல் நீதிபதி சரவணபாபு முன்பு வழங்கப்பட்டது. பின்னர் இருவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் மற்ற பகுதிகளில் உள்ள வழக்குகள் காரணமாக தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சில வழக்குகளில் அடுத்தடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 31.10.2023 அன்று ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நேதாஜி பேரவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில் பந்தய சாலை காவல் நிலையத்தில் 153, 153(A) (1)(a) ,153(A) (1)(b) 504, 505(ll) IPC ACT ஆகிய சட்டப்பிரிவுகளில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை பந்தய சாலை காவல் துறையினர் இன்று கைது செய்தனர். இதற்கான உத்தரவினை காவல் துறையினர் சவுக்கு சங்கரிடம் வழங்கியுள்ளனர்.
ஜாமின் கிடைத்து சீக்கிரம் வெளியே வரலாம் என்று இருந்த சவுக்குக்கு பேரிடியாக அமைந்துள்ளது இந்த புதிய வழக்கு..

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola