Salem Dharanidharan Vaiko |வைகோ ஒன்னுமே இல்ல” திமுக தரணிதரன் பேசியது என்ன?அதிருப்தியில் மதிமுகவினர்

திமுக செய்திதொடர்பாளரிடம் விஜய் பற்றி கேள்வி கேட்கும் போது உதாரணத்திற்கு வைகோவை இழுத்து “திமுகவில் இருந்து பிரிந்து அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை” என பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

முதல்முறையாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டிக்கு வருகிறார் விஜய். திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளை எதிர்த்து விஜய் களமிறங்குவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் வாக்காளர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும் விஜய், வரும் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இளைஞர்கள், பெண்களின் வாக்குகள் விஜய்க்கு சாதகமாக இருப்பதாக தவெகவினர் சொல்லி வருகின்றனர். 

இந்தநிலையில் INDIA TODAY-க்கு பேட்டியளித்த திமுக செய்திதொடர்பாளர் தரணிதரனிடம் விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கரூர் துயர சம்பவம் நடந்ததற்கு நான் யாரையும் குறை சொல்லவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு காரணம் தவெகவுக்கு அடிமட்ட தொண்டர்கள் இல்லாததுதான். 50% பெண்கள் தவெகவுக்கு வாக்களிப்பார்கள் என சொல்கிறார்கள். யாருக்கு எந்த அளவு ஓட்டு கிடைக்கிறது என்பதை தேர்தலில் மக்கள் தான் முடிவு செய்வார்கள். 1991ல் திமுகவுக்கு 2 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர். வைகோ திமுகவை உடைத்து கட்சியில் இருந்து வெளியேறி சென்றார். திமுகவின் 50% மாவட்ட செயலாளர்கள் வைகோவுடன் சென்றார்கள். அந்த நேரத்தில் அனைவரையும் ஈர்க்கக் கூடிய தலைவராக வைகோ இருந்தார். திமுகவில் இருந்து வெளியேறிய பிறகு 1996 தேர்தலில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. 2001 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வெறும் பூஜ்ஜியம் தான். அதன்பிறகு தான் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இதற்கு காரணம் அவரிடம் அடிமட்ட தொண்டர்கள் இல்லாததுதான். எம்ஜிஆரால் சாதிக்க முடிந்தது ஏன் வைகோவால் முடியவில்லை. ஏனென்றால் எம்ஜிஆர் திமுகவில் இருந்து முதலில் கட்சியை வளர்த்தார். அதன்பிறகு கட்சியை சரிபாதியாக உடைத்து அடிமட்ட தொண்டர்களையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். அதன்பிறகு ஜெயலலிதா அதிமுகவை வளர்த்தார். ஆனால் வைகோவுக்கு அடிமட்ட அளவில் பலம் இல்லாததால், அதிக அளவு மாவட்ட செயலாளர்களை தன் பக்கம் இழுத்தும் ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுக இருக்கும் நிலையில் வைகோவை விமர்சித்து தரணிதரன் பேசியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola