Rowdy Arrest | கட்டிலுக்கு அடியே பதுங்கு குழி..பயங்கர ஆயுதங்களுடன் ரௌடிகள்! தட்டித்தூக்கிய போலீஸ்
விசிக நிர்வாகி வீட்டில் கட்டிலுக்கு அடியில் நான்கு ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த நிலையில், போலீசார் அவர்களை கையும் களவுமாக கைது செய்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே பாத்திமாபுரம் பகுதியில் விசிக நிர்வாகி அலெக்ஸ் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்களைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்த வாரண்ட் பெற்று சோதனை நடத்தினர். அப்போது போலீசார் அதிரடியாக சோதனைக்காக அலெக்ஸ் வீட்டுக்கு செல்ல அங்கு அலெக்சின் மகன் கையில் கட்டுடன் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த கட்டிலுக்கு கீழே டார்ச் அடித்து போலீஸ் ஒருவர் பார்த்துள்ள நிலையில், அதனடியே தேடப்பட்டு வந்த கெயில் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி,பால்சாமி மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு நபர்களும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 22 கத்திகள் கைப்பற்றப்பட்டது.இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ஆம் தேதி இரவு பாத்திமா புரத்தில் விஸ்வா என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நான்கு நபர்கள் தாக்கிய வழக்கில், நான்கு நபர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்
அந்த நான்கு பேர் தான் தற்போது அலெக்ஸ் வீட்டு கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.விசிக பிரமுகர் அலக்சின் மனைவி ரூபின்சா கும்பகோணம் (கவுன்சிலர் ) என்பது குறிப்பிடத்தக்கது