பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
பாதியில் வெளியேறியது ஏன்?
”பேசவிடாம மைக் OFF பண்றாங்க”
ஆளுநர் பரபரப்பு அறிக்கை
சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாமல் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதாகவும், தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்யப்பட்டதாகவும், ஆளுநர் ரவி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை நடைபெற இருந்த நிலையில், அரசு தயாரித்த உரையை வாசிக்க ஆளுநர் மறுத்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசு உரையில் பல ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பொதுமக்களை பாதிக்கும் பல முக்கிய பிரச்சினைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்ததாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது என்றும், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருகையில் தமிழ்நாடு 4ஆம் இடத்திலிருந்து தற்போது 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 55 சதவீதம் உயர்வு, பெண்கள் மீது பாலியல் தாக்குதல் 33 சதவீதம் அதிகரிப்பு, போதைப்பொருள் பழக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டது போன்ற கடுமையான சமூக பிரச்சினைகள் தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலித் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள், கல்வித் துறையின் வீழ்ச்சி, காலியாக உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள், கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படாததால் மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இழந்துள்ள நிலை தொடர்பாகவும் அந்த உரையில் இடம்பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும் அறங்காவலர் குழுக்கள் இல்லாத ஆயிரக்கணக்கான கோவில்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்யப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாமல் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதாகவும், இதனால் உரையாற்ற முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் ஆளுநர் ரவி குற்றம்சாட்டியுள்ளார்.