RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்

தமிழ்நாடு ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பாடப்பட்ட தேசிய கீதத்தில் 'திராவிடம்' என்று வரும் வரியை பாடிய போதிலும், தமிழ் தாய் வாழ்த்தில் வரும் வரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் பதிவிடுகையில், "ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!  தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் தமிழக ஆளுநரின் ஊடக ஆலோசகர் வெளியிட்ட பதிவில், "ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த இந்தி மாத விழா மற்றும் தூர்தர்ஷனின் பொன்விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய குழுவினர் கவனக்குறைவின் காரணமாக "திராவிடம்" என்ற சொல்லைக் கொண்ட ஒரு வரியைத் தவறவிட்டனர். இந்த விஷயம் உடனடியாக ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய அதிகாரிகள் இது தொடர்பாக விசாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர கவர்னருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ இதில் எந்தப் பங்கும் இல்லை. தமிழ் மற்றும் மாநிலத்தின் உணர்வுகள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஆளுநர். அவற்றுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola