எப்படி இருக்கீங்க அப்பா மருத்துவமனையில் ராமதாஸ் ஓடோடி வந்த அன்புமணி
அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ்-க்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படவுள்ள நிலையில், அவரை பார்ப்பதற்காக அன்புமணி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியை பறிப்பதாக அறிவித்த ராமதாஸ் அவரை கட்சியில் இருந்தும் நீக்கினார். ஆனால் பொதுக்குழுபடி தனக்கு தான் அதிகாரம் இருப்பதாகவும், தலைவராக தொடர்வதாகவும் பதிலடி கொடுத்தார் அன்புமணி. இந்த நேரத்தில் அன்புமணியே 2026 ஆகஸ்ட் வரை தலைவராக தொடர்வார் என்ற பொதுக்குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
மோதல் ஆரம்பமானதில் இருந்தே அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திக்கும் ராமதாஸ், அன்புமணிக்கு எதிரான தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். ராமதாஸ் பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட வாரியான கூட்டங்களை தனியாக நடத்தி வருகிறார். ஆனால் ராமதாஸ்-க்கு எதிராக கட்சியினர் யாரும் செயல்பட வேண்டாம் என அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். இந்தநிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2013ம் ஆண்டு இதே மருத்துவமனையில் தான் ராமதாஸ்-க்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதயம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். ராமதாஸ்-க்கு இன்று பரிசோதனைகள் நடக்கவிருக்கும் நிலையில் அவர் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக வந்துள்ளார். ராமதாஸ் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.