Rajini | ”எதிர்க்கட்சிகளின் பலம் இந்தியாவுக்கு ஆரோக்கியம்” ரஜினி மாஸ் பேட்டி | Rahul Gandhi
பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைக்கிறார். இன்று மாலை 7 மணியளவில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
நேருவுக்கு பின் 3 வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பது சாதனை தான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் அனைத்தும் கடந்த ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டது. இந்த மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 272 இடங்கள் இருந்தால் கூட்டணி தயவு இல்லாமல் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், அக்கட்சிக்கும் 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனிடையே ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதால் பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைக்கிறார்.
இன்று மாலை 7 மணியளவில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதனையடுத்து அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் பதவி கொடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றம், 144 தடை உத்தரவு என மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறை சார்ந்த பிரபலங்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் திரைத்துறையில் பாஜக எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹேமமாலினி, கங்கனா ரனாவத், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் நிச்சயம் வருகை தருவார்கள். அதேசமயம் நடிகர்கள் ரஜினிகாந்த்,பவன் கல்யாண், அனில் கபூர், அனுபம் கெர், போனி கபூர், ஜீதேந்திரா சிங், கரண் ஜோஹர் உள்ளிட்ட இந்திய திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
இதனிடையே சென்னையில் இருந்து டெல்லிக்கு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் ஒரு வலுவான எதிர்கட்சியை இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்வு செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான ஒன்று. அதேசமயம் நேருவுக்குப் பின் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பது சாதனை” என ரஜினிகாந்த் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி 2வது முறையாக பதவியேற்ற போது ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது,