Rahul Gandhi stitched slippers | ராகுல் தைத்த செருப்பு! “கோடி ரூபாய் கொடுத்தாலும்..”தொழிலாளி எமோஷனல்
ராகுல்காந்தி தைத்த செருப்பை கோடி ரூபாய்க்கு கேட்டாலும் யாருக்கும் தர மாட்டேன் என சொல்லி வியக்க வைத்துள்ளார் தொழிலாளி.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் ஆஜரானார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜரானார். அப்போது நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில் திடீரென காரை நிறுத்த சொன்ன ராகுல், அங்கு செருப்பு தைத்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை சந்தித்தார். அவரிடம் தனது ஷூவை ராகுல் தைக்க சொன்னதும் தொழிலாளி செய்வதிறியாமல் மகிழ்ச்சியில் திகைத்து நின்றார்.
பின்னர் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த ராகுல், அவருக்கு உதவும் விதமாக இந்த செருப்பை எப்படி தைப்பது என கேட்டு தைத்து கொடுத்தார். மேலும் தனது ஷூவை தைத்து கொடுத்ததற்காக அவரும் பணமும் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ராகுலை பலரும் பாராட்டினர்.
இதையடுத்து, அந்த தொழிலாளிக்கு, ராகுல் காந்தி செருப்பு தைக்கும் இயந்திரத்தை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த தொழிலாளியை நேரில் சந்திப்பதற்காக நிறைய பேர் வர ஆரம்பித்துள்ளார். பைக், கார்களை நிறுத்திவிட்டு கூட தன்னிடம் வந்து பேசி செல்ஃபி எடுத்துச் செல்வதாக நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இந்தநிலையில் ராகுல்காந்தி தைத்த செருப்பை தருமாறு நிறைய பேர் கேட்பதாக தொழிலாளி தெரிவித்துள்ளார். ஒரு சிலர் 10 லட்சம் ரூபாய் வரை தருவதாக சொன்னதாகவும், ஆனால் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் தரமாட்டேன் என அந்த தொழிலாளி சொல்லியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருவேலை அந்த செருப்புக்கு சொந்தக்காரர் வந்து கேட்டால் கூட கொடுக்காமல், அதற்கான விலை என்னவோ அதை கொடுத்துவிடுவேன் என சொல்லியுள்ளார்.
ராகுல் காந்தி தைத்த செருப்பு, விலைமதிப்பற்றது, அதை பிரேம் செய்து, கடையில் மாட்டப்போகிறேன் என கூறியுள்ளார். ராகுல்காந்தி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் அமர்ந்து உரையாடுவது பாராட்டப்பட்டு வருகிறது. அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது மட்டுமல்லாமல் அவர்களது குறைகள் என்ன என்பது தொடர்பாகவும் கேட்டறிவதாக சமூக வலைதளங்களில் பாராட்டுகின்றனர்.