Rahul Gandhi on Smriti Irani | "தப்பா பேசாதீங்க” ஸ்மிருதி-க்கு ராகுல் SUPPORT... காரணம் என்ன?
அரசு பங்களாவை காலி செய்த ஸ்மிருதி இரானியை பலரும் கடுமையாக விமர்சித்த நிலையில், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி களமிறங்கியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. தன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் ஷர்மாவிடம் தோல்வியை சந்தித்த ஸ்மிருதி இரானிக்கு, இந்த முறை மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்படவில்லை. புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட வேண்டியிருந்ததால், அமைச்சரவையில் இடம்பெறாதவர்கள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டியிருந்தது. அதன்படி ஸ்மிருதி இரானி உள்பட நான்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் காலி செய்தனர்.
தேர்தலில் தோல்வி அடைந்து, அரசு பங்களாவை காலி செய்த ஸ்மிருதி இரானி குறித்து சிலர் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஸ்மிருதி இரானிக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த தலைவருக்கு எதிராகவோ இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலம் அல்ல. பலவீனத்தின் அறிகுறி" என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்யிட்ட ராகுல் காந்தியை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்றவர் ஸ்மிருதி இரானி. அப்போதிலிருந்தே ராகுல் காந்தி மீது ஸ்மிருதி இரானி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இருப்பினும் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக ராகுல்காந்தி பேசியுள்ளதை காங்கிரஸ் கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.