
Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்பு
பொதுப்பணித் துறை அமைச்சர் பதவி விலகக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத்தலைவர் குரல் வாசித்து கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு இணையாக பணியாற்றிய பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. இது புதுச்சேரி அரசுக்கு அவப்பெயர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் லட்சுமிநாராயணன் பதவி விலக வேண்டும். இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு பேரவைத்தலைவர் அனுமதி மறுத்தார்.
இதை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, துணைத் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், நாக. தியாகராஜன், காங்கிரஸ் கட்சித் தலைவர் மு. வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் பேரவையின் மைய மண்டபத்தின் நடுவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பேரவைத் தலைவர் தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக வெளியேற்ற சபைக் காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் சபைக் காவலர்கள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.