Priyanka Gandhi Wayanad : தெற்கில் பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

Continues below advertisement

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி. இதற்கு பின்னணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான் இருப்பதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் களமிறங்கிய ராகுல்காந்தி, 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினார். ஒரே நேரத்தில் இரண்டு தொகுதி எம்.பியாக இருக்க முடியாது என்பதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக முடிவெடுத்தார் ராகுல்காந்தி. இது கேரள காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதற்கு அடுத்து வந்த அறிவுப்பு காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியது. ராகுல் காந்திக்கு  பதில் பிரியங்கா காந்தி களத்திற்கு வருவதாக காங்கிரஸ் தரப்பில் இருந்து தகவல் வந்தது. 

வயநாடு தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. உடனேயே காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலுக்கு வருவது இதுவே முதல்முறை. 2019 முதலே பிரச்சாரம், கட்சி நிகழ்வுகள் என கட்சி ரீதியாக பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகிறார். தேர்தல் சமயங்களில் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் தேசிய அளவில் காங்கிரஸுக்கு கை கொடுத்தது. அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே கட்சியினரின் விருப்பமாகவும் இருந்தது.

வயநாடு தொகுதி ராகுல்காந்தி ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் பிரியங்காவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதே போல் வயநாடு நிலச்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது பிரியங்கா காந்தி நேரில் சென்று உதவியதும் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

வடக்கில் ராகுல் காநதி, தெற்கில் பிரியங்கா காந்தி என கணக்கிட்டு ராகுல் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸை உள்ளிடக்கிய கூட்டணி வலுவாக இருக்கிறது. அதனால் தெற்கில் பிரியங்கா காந்தியை களமிறக்கி தேசிய அரசியலில் தெற்கை காங்கிரஸின் கோட்டையாக மாற்ற டார்கெட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றி பெறும் பட்சத்தில், முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைவார். நாடாளுமன்றத்தில் பிரியங்காவின் பேச்சு காங்கிரஸுக்கு பலமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram