Premalatha Vijayakanth Cycling | சைக்கிள் ஓட்டிய பிரேமலதா விஜயகாந்த்! ஆர்ப்பரித்த தொண்டர்கள்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை தொட்டதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாதிப்பை விளக்கும் வகையில் சைக்கிள் பயணமும் மேற்கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”கேப்டனின் ஆணைக்கு இணங்க தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருவதாகவும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதாக கூறிய பிரேமலதா விஜயகாந்த், பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகிய பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே போனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கான வரிகள் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இந்த வரிகளை குறைப்பது மத்திய மாநில அரசுகளின் கடமை. பெட்ரோல், டீசல் மீதான வரியை 33 சதவீகிதம் வரை உயர்த்தி இருக்கிறார்கள், உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது” என்றார்
மக்களுக்கு வருமானம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் மக்கள் ஜிஎஸ்டி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 44 ரூபாய்க்கும், டீசல் விலையை லிட்டருக்கு 42 ரூபாய்க்கும் விற்பனை செய்யமுடியும். தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் கோடி கடன் சுமையில் இயங்கி வருகிறது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சரிடம் கேட்டால் உப்புசப்பில்லாத காரணத்தை கூறி வருகிறார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்