Prashant Kishor party | நிதிஷ், மோடிக்கு ஆப்பு! தேதி குறித்த பிரசாந்த் கிஷோர்!அதிரும் பீகார் அரசியல்
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர், கட்சியை தொடங்கவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வந்தார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என அடித்து சொன்ன நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக வந்ததால் பிரசாந்த் கிஷோரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் எனும் அமைப்பு, அக்டோபர் 2 ஆம் தேதி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை தேர்தலை குறிவைத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும் கட்சியை தொடங்குவதற்கு முன்பாக கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர். இந்தக் கூட்டங்களில், கட்சியை உருவாக்கும் செயல்முறை, அதன் தலைமை, அரசியலமைப்பு மற்றும் கட்சியின் முன்னுரிமைகள் குறித்து அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜன் சுராஜை அரசியல் கட்சியாக பதிவு செய்கிறார் பிரசாந்த் கிஷோர். நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் பீகாரில் செல்வாக்குடன் இருக்கின்றன. இந்தநிலையில் கடந்த 30 ஆண்டுகளாக லாலு பிரசாத், நிதிஷ் மற்றும் பாஜகவால் பொதுமக்கள் துயரத்தில் உள்ளதாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
பல்வேறு மாநில தேர்தல்களுக்கு தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு வந்த பிரசாந்த் கிஷோர், பீகாரில் அடுத்து வரும் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறுவது உறுதி என அடித்து சொல்லியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளில் தேர்தல் வெற்றியில் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்கள் கைகொடுத்துள்ளன. அவரது சொந்த கட்சி களத்துக்கு வரும் போது வியூகங்கள் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்ற பேச்சு ஆரம்பமாகியுள்ளது.