Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?

Continues below advertisement

காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? என வைகோ, திருமாவை நேரடியாக அட்டாக் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் காங்கிரஸ் எம்..பி மாணிக்கம் தாகூர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகராக அறியப்படும் காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி திமுகவை குறிவைத்து விமர்சனங்களை வைத்து வந்தார். திமுக எம்.பி கனிமொழி அதிமுக ஆட்சியை விட்டு போன போது தமிழ்நாடு பின் தங்கிய நிலையில் இருந்ததாகவும் திமுக ஆட்சியில் வளர்ந்த மாநிலமாக மாறிவிட்டதாகவும் MP கனிமொழி சொல்லியிருந்தார். இதனை குறிப்பிட்டு விமர்சனம் செய்த பிரவீன் சக்கரவர்த்தி தற்போது உத்தரபிரதேசத்தை விட தமிழ்நாடு அதிக கடன் சுமையில் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பிரவீன் சக்கவர்த்தி குறித்து காங்கிரஸ் தலைமைக்கு புகார் சென்றுள்ளதாக விளக்கம் கொடுத்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

இந்தநிலையில் கூட்டணி கட்சியினரை அட்டாக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர். அதில், ‘விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி புகார் அளித்துள்ளதாக செய்தி படித்தேன், இது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. 

காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை,  ரவிக்குமார், துரை வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், அண்ணன் வைகோ, திருமாவளவன் அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது.கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல” என தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தோழமை கட்சிகள் தலையிட வேண்டாம் என செல்வப்பெருந்தகையும் பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது விவாதமாக மாறியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola