Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், இன்று வன்னியர் மகளிர் மாநாடு நடக்க உள்ளது. இதில், ராமதாஸ் மாஸ் கட்டவேண்டும் என்று ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் சூழலில் அதிக அளவிலான கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாட்டில் திமுகவும் களம் இறங்கியுள்ளதாக சொல்கின்றனர். இதற்கு பின்னணியில் திமுகவின் பக்கா ஸ்கெட்ச் இருப்பதாக கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமஸுக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. இதனிடையே, தான் ராமதாஸ் இல்லாமல் நேற்று பாமக பொதுக்குழுவை நடத்தி முடித்தார் அன்புமணி. இச்சூழலில், தான் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ராமதாஸ் தலைமையில் வன்னியர் மகளிர் மாநாடு இன்று நடக்கவுள்ளது. அன்புமணியின் பொதுக்குழுவிற்கு அடுத்த நாளே தனது தலைமையில் மாநாடு நடைபெறுவதால் பாமக தொண்டர்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கான முயற்சியில் ராமதாஸ் இறங்கியுள்ளதாகவும் அதைவைத்து மாஸ் காட்டவும் திட்டம் தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பின்னணியில் திமுகவின் பக்கா ப்ளான் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதாவது, பாமகவில் பிரச்சனையை ஏற்படுத்தும் முயற்சியில் திமுக ஈடுபட்டுவருவதாக அன்புமணி குற்றம் சாட்டி வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது. திமுக ஆட்சியை 2026-ல் அகற்ற வேண்டும் என்று அன்புமணி மேடைக்கு மேடை கூறிவரும் நிலையில் ராமதாஸ் திமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார். இதனால் அவரை எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு இழுத்து விட வேண்டும் என்று திமுக ஆர்வம் காட்டி வருவதாக சொல்கின்றனர். ராமதாசும் - அன்புமணிக்கும் இடையேயான விரிசலை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவும் திமுக திட்டம் தீட்டி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதல் ராமதாஸுக்கு ஆதரவாக திமுக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
அதன்படி, இன்று ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள வன்னியர் மகளிர் மாநாட்டில் அதிக அளவிலான கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை திமுகவே செய்வதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ராமதஸுக்கும் அன்புமணிக்குமான பிரச்சனையை ஊதி பெரிதாக்கி அவர்களை சேரவிடாமல் பாமகவை பலவீனப்படுத்துவதன் மூலம் 2026 தேர்தலில் அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் திமுக நினைப்பதாகவும் கூறப்படுகிறது. அன்புமணி பக்கம் பாமக நிர்வாகிகள் பலர் இருந்தாலும் ராமதாசுக்கு தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டுவருவதாகவும் அதனால் வன்னியர் மகளிர் மாநாட்டில் ஆட்களை கொண்டுவருவதற்கு திமுக மும்முரம் காட்டி வருவதாகம் கூறப்படுகிறது.