”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

விழுப்புரம் திமுகவில் பொன்முடியை ஓரங்கட்டிவிட்டு தன்னுடைய செல்வாக்கை அதிகரித்து வரும் லட்சுமணனை, அமைச்சர் MRK பன்னீர்செல்வம் திமுக கூட்டத்திலேயே வைத்து கண்டித்துள்ளார். மத்த மாவட்டத்துக்கு ஒரு நியாயம், விழுப்புரத்து ஒரு நியாயமா என அவரது ஆதரவாளர்கள் கடுப்பில் இருப்பதாக சொல்கின்றனர்.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி தற்போது கட்சி பதவியையும், அமைச்சர் பதவியை இழந்து நிற்கிறார். விழுப்புரத்தின் முடிசூடா மன்னனாக இருந்து வந்த பொன்முடியின் பவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணனின் கைகள் ஓங்க ஆரம்பித்துள்ளன. இதுதான் சரியான நேரம் என கருதும் லட்சுமணன் தனது ஆதரவாளர்களை திரட்டி பொன்முடிக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்.

கட்சி நிகழ்ச்சி பேனர்களில் கூட பொன்முடியின் புகைப்படங்களை தவிர்த்து வருகிறார் லட்சுமணன். இந்த விவகாரம் விழுப்புரம் மண்டல பொறுப்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காதுகளுக்கும் சென்றது. இந்தநிலையில் செயற்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வத்திடம் சிக்கிய லட்சுமணனுக்கு டோஸ் விழுந்துள்ளது. செயற்குழு கூட்டத்துக்கான பேனர்களிலும் பொன்முடி புகைப்படங்களை லட்சுமணன் தவிர்த்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் 2 தரப்பாக பிரிந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

அதனால் இதற்கு முடிவுகட்ட வேண்டும் என நினைத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செயற்குழு கூட்டத்தில் லட்சுமணனை பார்த்து அனைவருடன் இணக்கமாக இருந்து வேலை பார்க்க வேண்டும், கட்சிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே சீனியர்களை ஓரங்கட்டக் கூடாது என கறார் காட்டியதாக சொல்கின்றனர். மேலும் தன்மானத்தை இழந்தாவது விழுப்புரத்தில் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என எம் ஆர் கே பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விழுப்புரத்தில் நடந்த கூட்டங்களில் பொன்முடியின் புகழ் பாடி அவரை யாரும் ஓரங்கட்ட முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிட்டார்.

பொன்முடிக்கு ஆதரவாக எம் ஆர் கே பன்னீர்செல்வம் கண்டித்தது லட்சுமணன் ஆதரவாளர்களுக்கு கடுப்பை கிளப்பியுள்ளது. கடலூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது மூத்த அமைச்சரின் படத்தை போடாமல் தான் தவிர்த்தார்கள். சேலம், சென்னை போன்ற மாவட்டங்களை பிரிக்கும் போதும் அதையே தான் செய்தார்கள். இப்போது விழுப்புரம் மட்டும் விதி விலக்காக இருக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும். ஒரு மாவட்டம் பிரித்தால் அந்த மாவட்ட செயலாளர் செயல்பட தடையாக எதுவும் இருக்க கூடாது என்று முனுமுனுத்து வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார் முன்னாள் எம்.பி.யும் பொன்முடியின் மகனுமான டாக்டர் கௌதம சிகாமணி.

விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம், வானூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார். இதனை சுட்டிக்காட்டியே மாவட்டத்தை பிரித்து பொறுப்பு கொடுத்தும் லட்சுமணனுக்கு கண்டிஷன்களை போடுவது சரியில்லை என ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் இருக்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola