அருள் காரை நொறுக்கியது ஏன்? தாக்குதலின் ஆரம்ப புள்ளி! பகீர் CCTV காட்சி

Continues below advertisement

ராமதாஸ் ஆதரவு ஒன்றிய செயலாளர் வீட்டில் துக்கம் விசாரிக்க வந்த அருள் ஆதரவாளர்கள் பாக்கு கொட்டை காயவைக்கும் இடத்தில் காரை நிறுத்தியதால் தட்டி கேட்ட நபரை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகள் பரபரப்பை கிளப்பிய நிலையில் சண்டைக்கான ஆரம்ப புள்ளி சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகத்தாம்பட்டியில் ராமதாஸ் ஆதரவு பாமக ஒன்றிய செயலாளர் உயிரிழப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக எம்.எல்.ஏ அருள் நேரில் சென்றுள்ளார். அப்போது பாக்கு கொட்டை காயவைக்கும் இடத்தில் அருளின் ஆதரவாளர்கள் காரை நிறுத்தியுள்ளனர. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயியும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளருமான மாற்றுத்திறனாளி ராஜேஷ் குமார் காரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இங்கே நிறுத்தக்கூடாது என சொல்லி காரை எடுக்குமாறு தெரிவித்த நிலையில் அருள் ஆதரவாளர்கள் அதனை கண்டு கொள்ளாமல் சென்றதாக கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் சென்று காரை இங்கே நிறுத்தக் கூடாது என வாக்குவாதம் செய்ததால், அருள் ஆதரவாளர்கள் மாற்றுத்திறனாளி ராஜேஷ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அருள் ஆதரவாளர் ஒருவர் காரை வைத்து அன்புமணி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை இடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் அருள் ஆதரவாளர்கள் வந்த காரினை அடித்து நொறுக்கியதாக அன்புமணி ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். MLA அருளின் காரை அடித்து நொறுக்குவதற்கு காரணமாக சொல்லப்படும் மாற்றுத்திறனாளி ராஜேஷ் குமாரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி சண்டை நடந்ததால் அந்த இடமே பரபரப்பாக மாறியது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுதொடர்பாக பாமக எம்.எல்.ஏ அருள் கூறுகையில், ‘துக்க வீட்டில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். என்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola