OPS-ன் தனிக்கட்சி ப்ளான் விஜய்யுடன் கூட்டணி? EPS-க்கு எதிராக Masterplan
எப்படியாவது அதிமுகவிற்குள் நுழைந்து விட வேண்டும் என போராடி பார்த்த ஓபிஎஸ் தரப்புக்கு இபிஎஸ் ரெட் சிக்னல் கொடுத்து தடுத்து நிறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் உள்ள ஓபிஎஸ் புதுகட்சி ஒன்று தொடங்கி, விஜய்யுடன் கைகோர்த்து அதிமுகவுக்கே செக் வைக்கும் வகையில் பக்கா ப்ளான் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
அதிமுகவும், பதவியும் கைகளை விட்டு நழுவிய பிறகு மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ஓபிஎஸ். இந்த நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ரூட்டை மாற்றியது பாஜக. அதிமுக பாஜக கூட்டணியால் என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டார் ஓபிஎஸ். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவே மாட்டேன் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் இபிஎஸ். அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் வெளிப்படையாகவே சொன்ன போதும் இபிஎஸ் அதற்கு நோ சொல்லிவிட்டார்.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ரஞ்சித்குமார், உங்கள் காலிலேயே வந்து விழுகிறோம். சேர்த்துக்கொள்ளுங்கள்.எங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், 2026-ம் ஆண்டு, மூன்று எழுத்து உள்ள கட்சிதான் ஆட்சி அமைக்கும்” என்று பேசியிருக்கிறார். கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் இணைவதற்காக ஓபிஎஸ் தரப்பினர் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டதற்கு, “காலம் கடந்து விட்டது” என முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் பற்றி கேட்ட போது ‘காலம் தான் பதில் சொல்லும்’ என ஹிண்ட் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ் தரப்புக்கு முடிவு கட்டிவிட்டு டிடிவி தினகரனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். மீண்டும் கட்சிக்குள் சென்றுவிடலாம் என காத்திருந்த ஓபிஎஸ் தரப்புக்கு இபிஎஸ்-ன் பேச்சு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அதனால் இதற்கு மேல் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என நினைத்து புதுக்கட்சி ஒன்றை தொடங்கும் முடிவை இபிஎஸ் எடுத்துள்ளதாக சொல்கின்றனர். புதுக்கட்சி ஆரம்பித்தால் இரட்டை இலை மொத்தமாக கைகளை விட்டு சென்றுவிடும் என்பதால் சைலண்டாக இருந்த ஓபிஎஸ், அரசியல் எதிர்காலத்தை கணக்கில் வைத்து தற்போது புதுக்கட்சி முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
புதுக்கட்சி மட்டும் கிடையாது, விஜய்யுடன் கூட்டணி வைப்பது தான் ஓபிஎஸ்-ன் ப்ளான் என சொல்கின்றனர். விஜய் தலைமையில் மூன்றாவதாக ஒரு அணி உருவாகும் நிலையில் அந்த கூட்டணிக்கு சென்றால் தனக்கான செல்வாக்கு இருக்கும் என்று ஓபிஎஸ் நினைக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் இபிஎஸ்-க்கு எதிராகவும் இதில் ப்ளான் இருக்கிறது. தனிக்கட்சி தொடங்கி தென் தமிழ்நாட்டில் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பது தான் ஓபிஎஸ்-ன் டார்கெட். சமூக வாக்குகள் அடிப்படையில் தென் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றவராக இருக்கும் ஓபிஎஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றதில் இருந்தே இபிஎஸ் தரப்புக்கு அந்த வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதில் சிரமம் இருக்கிறது. பாஜகவில் இருந்து வெளியேறி விஜய்யுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் தென் தமிழக வாக்குகளை எளிதாக பிரித்து விடலாம் என ஓபிஎஸ் நினைக்கிறாராம். திமுக அதிருப்தி வாக்குகளை ஒருங்கிணைக்க நினைக்கும் இபிஎஸ்-ன் முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் விஜய்யை வைத்து அந்த வாக்குகளை இழுக்க ஓபிஎஸ் திட்டமிடுவதாக சொல்கின்றனர்.
ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருந்து விஜய்ய்க்கு தூது சென்றுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் அனைவரும் திமுக, அதிமுகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், முதலமைச்சராக இருந்துள்ள ஓபிஎஸ் தவெகவுடன் கூட்டணி வைத்தால் ப்ளஸாக தான் இருக்கும் விஜய்யும் நினைக்கிறாராம். கட்சியில் அரசியல் ரீதியாக அனுபவம் பெற்றவர்களோ, அரசியலில் பரீட்சயமான முகங்களோ இல்லாத நேரத்தில் ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்த்து கொண்டால் கட்சிக்கு பலம் தான் என நினைத்து விஜய்யும் ஓபிஎஸ் உடன் கைகோர்க்க வாய்ப்பிருப்பதாக தவெக தரப்பில் பேச்சு இருக்கிறது.