OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
பாஜக அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், அமித் ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தற்போது எந்த திசையில் செல்வது என தெரியாமல் திணறி வருகிறார். ஓபிஸ் உட்கட்சி மோதல் காரணமாக , எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து சட்ட போராட்டங்கள் மேற்கொண்டார். ஆனால் அனைத்திலுமே தோல்விதான் கிடைத்தது.
இதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். அடுத்தாக சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணியில் நீடிப்போம் என எதிர்பார்த்தவருக்கு, அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததால் தனித்து விடப்பட்டார். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதே நேரம் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் என தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லையென உறுதியாக கூறிவிட்டார்.
அடுத்ததாக தனக்கு ஆதரவாக தன்னுடன் இருந்த எம்எல்ஏ மனோஜ் பாண்டியனும் திமுகவிற்கு பல்டி அடித்து விட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுத்த செங்கோட்டையனும் திடீரென அதிமுக ஒருங்கிணைப்பு பணியை தூக்கி போட்டுவிட்டு நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்து விட்டார். அடுத்தடுத்த நிகழ்வுகளால் அதிர்ச்சியான ஓபிஎஸ் டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று முன் தினம் யாருக்கு தெரியாமல் கொச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார் ஓபிஎஸ்.
தனது புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று இரவு பாஜக மூத்த தலைவரான அமித்ஷாவை 20 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலைப்பாடு, எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளால் தமிழகத்தில் அதிமுக தொடர்ந்து வலுவிழந்து வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். அதே நேரம் தான் புதிதாக கட்சி தொடங்க இருப்பதாகவும் அந்த கட்சி பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் மகன் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியும் உடன் இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ், பாஜகவை சேர்ந்த மற்ற தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர்கள் உடன் பேச்சுவாரத்தை நடத்திய பின்னர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.