OFFER கொடுத்த அமித்ஷா! தூக்கியெறிந்த OPS? தமிழ்நாடு வரும் மோடி

பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம் என பாஜக தரப்பில் இருந்து ஓபிஎஸ்-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் இறங்கி வராமல் விடாப்பிடியாக இருப்பதாக சொல்கின்றனர்.

அதிமுக பாஜக கூட்டணியில் என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஓபிஎஸ், பாஜக தலைமையிடமே நேரடியாக பேசி இந்த பஞ்சாயத்தை முடித்துவிடலாம் என்ற முடிவில் இருந்தார். இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ ஒன்றுசேர்ப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே அமைச்சர் அமித்ஷா முயற்சி செய்து வந்தார். ஆனால் கூட்டணி அமைந்த பிறகு ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவிற்குள் நுழைப்பதற்கான முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட வேண்டும் என நினைத்த பாஜக, ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டியதாக பேச்சு அடிபட்டது. 

இந்தநிலையில் 2 நாட்கள் பயணமாக கடந்த ஜூலை 26, 27 தேதிகளில் தமிழ்நாடு வந்தார் மோடி. அவரை பார்த்து பேசிவிட வேண்டும் என கணக்கு போட்ட ஓபிஎஸ்-க்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மட்டுமே பிரதமரை நேரில் சந்தித்து பேசினார். அடுத்த சில நாட்களிலேயே பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார் ஓபிஎஸ். 

மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால் தான் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதாக சொல்லப்படுகிறதே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு என்னிடம் சொல்லியிருந்தால் நான் அனுமதி வாங்கி தந்திருப்பேன் என சொல்லியுள்ளார். 

ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை ஒரே நாளில் 2 முறை சந்தித்துள்ளது பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக சொல்கின்றனர். வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய பாஜக, ஓபிஎஸ்-ன் முடிவால் குழப்பத்தில் இருக்கிறது. அதிமுக வாக்குகளை ஓபிஎஸ் பிரித்துவிடுவார் என்பதால் திமுகவுக்கு சாதமான சூழல் உருவாகிவிடும் என நினைக்கின்றனர். அதனால் ஓபிஎஸ்-ஐ மீண்டும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் பிரதமர் மோடி ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரவிருக்கிறார். இந்த தடவை பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நாங்களே செய்து தருகிறோம் என ஓபிஎஸ்-யிடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. ஆனால் ஓபிஎஸ் அதற்கு இறங்கி வராமல் விடாப்பிடியாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் நடக்காத நிலையில், இனியும் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது, நானும் என்னுடைய செல்வாக்கை காட்டிவிடுகிறேன் என ஓபிஎஸ் நினைப்பதாக சொல்கின்றனர். இருந்தாலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போது ஓபிஎஸ் பஞ்சாயத்தை முடித்து வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola