One Nation One Election: ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLAN
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே காலத்தில் நடத்த வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசின் அதிகாரம் முன்பு இல்லாதா அளவிற்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவாகினாலோ மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தான் நடைபெறும்.
இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ இதை எல்லாம் காதில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த சட்டம் குறித்து கருத்துக்களை பெறுவதற்காகவும், அதை ஆய்வு செய்து தொகுத்து வழங்குவதற்காகவும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழு தனது விவரங்களை மத்திய அரசு முன்னிலையைில் தாக்கல் செய்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இப்போது இருக்கும் ஒரே வேலை, அனைத்து மாநில அரசுகளையும் சமாதானப்படுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். ஏனெனில் இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் 6 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தங்களை செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பலம் மத்திய அரசுக்கு வேண்டும். தற்போது மத்திய அரசின் கூட்டணி பெரும்பான்மையோடு இருந்தாலும், இந்த பலத்துடன் இல்லை.
அதாவது மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் 292 பேர் பாஜக கூட்டணியில் உள்ளனர். ஆனால் 3ல் 2 பங்கு பலத்தை பெற 364 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். மாநிலங்களவையில் 245 எம்பிக்களில் 112பேர் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் இது போதாது. 3ல் 2 பங்கு பலம் வேண்டும் எனில் குறைந்தபட்சம் 164 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவேதான் அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் இந்த மசோதா அடுத்த வாரம் தாக்கல் ஆக இருக்கிறது. இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. அதே நேரம் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.