Trichy Surya | SV சேகரை ஏன் தூக்கல? பற்ற வைக்கும் திருச்சி சூர்யா!

Continues below advertisement

தமிழிசை மற்றும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காமல் அண்ணாமலை, என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க காரணம் ஏன் என காட்டமாக திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சாதியின் அடிப்படையில் தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து செல்வதா என கடுமையாக விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு பாஜகவில் உட்கட்சி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு ஒரு சில நிர்வாகிகள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தனர். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி ஒரு இடம் கூட வெல்லாமல் படுதோல்வியடைந்தது. இதற்கு பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை, கட்சியில் குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கருத்து ஒன்றை நேர்காணலில் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழிசையை அண்ணாமலையின் தீவிர விசிறியாக செயல்பட்டு வரும் திருச்சி சூர்யா விமர்சித்திருந்தார். இந்த உட்கட்சி மோதல் விவகாரம் பாஜக மேலிடம் வரை சென்று அங்குள்ள தலைவர்களுக்கு அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகார பின்னணியில் தான் திருச்சி சூர்யாவை பாஜக தலைமை நீக்கியதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் இது தொடர்பாக திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?

தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து  Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது என திருச்சி சூர்யா பாஜகவை விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram