நிதிஷ்குமார் MASTERPLAN! சொதப்பிய பாஜக! ஐக்கிய ஜனதா தளத்தின் GAME
தொகுதி பங்கீடு விவகாரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில் வேட்பாளர் பட்டியலிலேயே தனது மாஸ்டர் ப்ளானை காட்டியுள்ளார் நிதிஷ்குமார். ஆனால் பாஜக கூட்டணியால் ஐக்கிய ஜனதா தளம் முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.
243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், தனித்து களமிறங்கும் பிரசாந்த் கிஷோரும் வேட்பாளர்களையே அறிவித்துவிட்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும் பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி ராம் விலாஸ் கட்சிக்கு 29 தொகுதிகளும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகளும் மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் 101 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் நிதிஷ்குமார். சாதிவாரி பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்தி வேட்பாளர் பட்டியலை தயார் செய்துள்ளார் நிதிஷ்குமார். இந்த 101 பேரில் 27 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 22 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 22 பேர் பொதுப் பிரிவினர், 15 பட்டியல் வகுப்பினர், ஒருவர் பழங்குடியினர். அதேபோல் பெண்கள் 13 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு வேலைகள் நடந்தது. அது நிதிஷ்குமாருக்கு ப்ளஸாக மாறிய நிலையில் தேர்தலிலும் அதனையே ஆயுதமாக எடுத்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி தொடர்ந்து பேசி வரும் நிலையில் பீகாரில் அதற்கு செக் வைக்கும் வகையில் நிதிஷ் குமார் கணக்கு போட்டுள்ளார்.
ஆனால் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கியில் இந்த கூட்டணி கோட்டைவிட்டு விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. நிதிஷ் குமார் வெளியிட்ட பட்டியலில் 4 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள். கடந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் 10 பேரை களமிறக்கிய நிலையில் தற்போது அதில் பாதி கூட இல்லாமல் வேட்பாளர்கள் பட்டியலில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இஸ்லாமிய வேட்பாளர்களே இல்லாமல் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. ஏற்கனவே பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனம் இருக்கும் நேரத்தில், பாஜகவுடன் சேர்ந்து கொண்டு நிதிஷ் குமாரும் அவர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர் தரப்பினர் விமர்சிக்கின்றனர்.