மிரட்டி சாதித்த நிதிஷ்! பாஜக ப்ளான் FLOP! அடுத்த முதல்வர் யார்?
மகாராஷ்டிராவில் கடைசி நேரத்தில் ஏக்நாத் ஷிண்டேவை ஏமாற்றி CM பதவியை வசமாக்கிய பாஜகவின் ஐடியா நிதிஷ் குமாரிடம் துளி கூட எடுபடவில்லை. பாஜக தலைமைக்கு பயத்தை கொடுக்கும் சில எச்சரிக்கைகளை கொடுத்து CM பதவியை நிதிஷ்குமார் வசமாக்கியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை தட்டிச் சென்று அபார வெற்றி வெற்றது. இந்த கூட்டணியில் உள்ள பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சி 19 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.
என்ன ஆனாலும் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் நிதிஷ் குமார் உறுதியாக இருந்தார். 2005ம் ஆண்டில் இருந்து பீகாரின் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார் அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுத்ததில்லை. எத்தனை கூட்டணி மாறினாலும் சிஎம் இருக்கையில் அவரை தவிர யாரும் இருக்கக் கூடாது என்பதுதான் அவருடைய டார்கெட். அதே நேரத்தில் பாஜக, அதிக தொகுதிகளை கைப்பற்றிவிட்டால் CM பதவியை கைப்பற்றிவிடலாம் என கணக்கு போட்டது. மகாராஷ்டிர தேர்தலின் போது ஆரம்பத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்த பாஜக, தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றியதும் ஏக்நாத் ஷிண்டேவை ஓரங்கட்டி CM பதவியை வாங்கி கொண்டது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த நிலையில், துணை முதலமைச்சர் பதவிக்கு இறங்கினார் ஏக்நாத் ஷிண்டே.
ஆனால் பாஜகவின் இந்த வேலை நிதிஷ்குமாரிடம் எடுபடவில்லை. இறுதியில் நிதிஷ் குமார் தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியை பறிக்க பாஜக முயற்சித்த போது நிதிஷ் குமார் பாஜக தலைமைக்கே மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சொல்கின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் நிதிஷ் குமார் உதவியுடன் தான் ஆட்சி அமைத்துள்ளது. நிதிஷ் குமார் பின்வாங்கிவிட்டால் மத்தியில் பாஜக ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் பயம் காட்டியதாக சொல்கின்றனர்.
அதேபோல் கூட்டணி மாறுவதற்கு தயங்காத நிதிஷ் குமார் அதனை வைத்து பாஜகவுடன் டீலிங்கை முடித்ததாக தெரிகிறது. முதலமைச்சர் பதவி தரவில்லை என்றால் பாஜகவை கழற்றிவிட்டு இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமா என்ற பேச்சும் இருந்ததாக சொல்கின்றனர். இந்த கூட்டணியை தவிர்த்து பார்க்கும் போது ராஷ்டிரிய ஜனதா தளம் 25 தொகுதிகளையும், காங்கிரஸ் 6 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூஸ்னிட் 2 தொகுதிகளையும், சிபிஐ, ஐஐபி கட்சிகள் தலா ஒரு தொகுதியையும், அசாதுதீன் ஓவைசியின் AIMIM 5 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியையும் வைத்துள்ளன. இந்த கட்சிகளுடன் நிதிஷ் குமார் கைகோர்த்தால் மொத்தமாக 124 தொகுதிகள் வந்துவிடும். ஆட்சியமைக்க பெரும்பான்மை 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் நிதிஷ் குமார் பாஜகவை கழற்றிவிட்டு இந்த கூட்டணியில் இணைந்தாலும் எளிதில் ஆட்சியமைத்துவிடும். நிதிஷ் அதிக தொகுதிகள் வைத்திருப்பதால் முதலமைச்சர் பதவியும் அவருக்கே வந்துவிடும். நிதிஷ் போய்விட்டால் பாஜக கூட்டணியிடம் 117 இடங்கள் மட்டுமே இருக்கும் என்பதால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த கணக்குகளை எல்லாம் காட்டி தான் நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவி டீலிங்கை முடித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. கூட்டணி தாவி ஆட்சியை கவிழ்ப்பது நிதிஷ் குமாருக்கு புதிது கிடையாது என்பதால் பாஜகவுக்கும் அவர் மீது பயம் இருந்துள்ளது. அதனால் பீகாருக்குள் காங்கிரஸ் கூட்டணிக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என கணக்கு போட்டு நிதிஷ் குமாருக்கே முதலமைச்சர் பதவியை கொடுக்க பாஜக தலைமை இறங்கி வந்துள்ளதாக சொல்கின்றனர்.