CM CHAIR உங்களுக்கு..மத்ததெல்லாம் எங்களுக்கு நிதிஷிடம் பாஜக டீலிங் | Nitish Kumar | Bihar Goverment

Continues below advertisement

பீகாரில் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவியை ஒதுக்கிவிட்டு, அமைச்சரவையில் பெரும்பான்மை வகிக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசாங்கம் வரும் நவம்பர் 20ம் தேதி பதவியேற்கும் என கூறப்படுகிறது.

பரபரப்புக்கு சற்றும் பஞ்சமின்றி பீகார் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக - நிதிஷ்குமார் அடங்கிய என்டிஏ கூட்டணி 202 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. 89 தொகுதிகளை வென்றுள்ள பாஜக, பீகாரின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து புதிய அரசாங்கம் எப்போது பதவியேற்கும்? அடுத்த முதலமைச்சர் யார்? கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பல கேள்விகள் எழுந்துள்ளன. அதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

பாஜக அதிக எம்.எல்.ஏக்களை கொண்டு மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும், நிதிஷ்குமாரையே மீண்டும் முதலமைச்சராக்க முடிவு செய்துள்ளதாம். அதன்படி, வரும் 19 அல்லது பெரும்பாலும் 20ம் தேதி புதிய அரசாங்கம் பதவியேற்க உள்ளதாம். இதன் மூலம், பீகார் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். ஆனாலும், அவரது தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை காட்டிலும், பாரதிய ஜனதா கட்சி அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், போட்டியிட்ட 101 தொகுதிகளில் 95 சதவிகித வெற்றியை பதிவு செய்த பாஜகவிற்கு, அமைச்சரவையில் 15 முதல் 16 இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதிலும் பல முக்கிய இலாக்காக்களும் பாஜகவிற்கே ஒதுக்க வாய்ப்புள்ளதாம். தொடர்ந்து, 85 இடங்களை வென்றுள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு சுமார் 14 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இதுபோக சபாநாயகர் பதவி யாருக்கு என்பது குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபல சிறிய கட்சிகளும், இந்த தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் அந்த கட்சிகளுக்கான பிரதிநிதித்துவமும் கட்டாயமாகியுள்ளது. அதன்படி, 19 தொகுதிகளில் வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சிக்கு அமைச்சரவையில் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளையும், உபேந்திரா குஸ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் வென்றுள்ளது. அதன்படி, தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாம். 6 எம்.எல்.ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற விகிதத்தில் கட்சிகள் இடையே அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாம். புதிய முதலமைச்சர், அவரது அமைச்சரவை சகாக்கள் தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola