Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை
தமிழக பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை அடுத்து, ஜெயலலிதா புகைப்படத்துடன் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே நயினார் வேலுமணி சந்திப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த புகைப்படம் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளாரா நயினார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
2026 தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டன. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரனமாக கூட்டணியை முறித்து கொண்டு வெளியே வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் இந்த 2026 தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், வாய்ப்பே இல்லை எனக்கூறி ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டார் ஈபிஎஸ். ஆனால் அதிமுக சீனியர்ஸ் சிலர் பாஜக வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடியுடன் அடிக்கடி ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் நெல்லைக்கு கள ஆய்வுக்காக சென்றிருந்த எஸ் பி வேலுமணி நயினார் நாகேந்திரனின் வீட்டிற்கே சென்று ரகசிய மீட்டிங் போட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவேளை பாஜக அதிமுக கூட்டணி குறித்து தான் இந்த மீட்டிங் என அப்போது பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் இந்த மீட்டிங்கின் ரியல் ப்ளான் வெளியே வந்துள்ளது.
பாஜக துணைத்தலைவராக உள்ள நயினார் அதிமுகவில் இருந்து விலகியவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தமிழ்நாட்டில் பெயர் சொல்லக்கூடிய அளவில் உள்ள நயினாருக்கு பாஜகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழிசை, எல் முருகன் ஆகியோர் பாஜக மாநில தலைவர்களாக இருந்த பொழுது, அனைத்து முக்கிய பாஜக தலைவர்களின் முகமும் அடிக்கடி வெளியே வரும். ஆனால் எப்போது அண்ணாமலை கைக்கு சென்றதோ தலைமை, அப்போது தமிழக பாஜகவின் ஒரே முகமாக மாறிவிட்டார் அண்ணாமலை. இதனால் நயினார் போன்ற முக்கிய புள்ளிகள் மறைந்தே போனார்கள் எனலாம்.
எனவே தனக்கு முக்கியத்துவம் இல்லாத இடத்தை காலி செய்துவிட்டு பழைய கட்சிக்கே போய்விடலாம் என நயினார் முடிவு செய்துவிட்டதாகவும், அதுகுறித்து பேசவே வேலிமணியுடனான சந்திப்பு என அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துடன் தனது புகைப்படத்தை மட்டும் பதிவிட்டு அதிமுகவுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.