Durai Murugan | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir Anand

என்னுடைய மகன் கதிர் ஆனந்தை கிடுக்கிப்பிடி கேள்விகளால் மணிக்கணக்காக அமலாக்கத்துறை திணறடித்த போதும், எனக்காக அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களோ, ஏன் திமுக நிர்வாகிகள் கூட யாருமே அந்தப் பக்கம் வரவில்லையே என அமைச்சர் துரைமுருகன் தலைமை மீது வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

2019 மக்களவை தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 11 கோடியே 54 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டு பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தால் வேலூர் மக்களை தொகுதிக்கு தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. விசாரணை அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லும் போது இந்த விவகாரம் எம்.பியும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தின் பக்கம் திரும்பியது. 

இந்த வழக்கில் தான் கடந்த ஜனவரி 3ம் தேதி கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு வேட்டை நடத்தியது அமலாக்கத்துறை. அதில் சில முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 7 முறை சம்மன் அனுப்பியும் கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை. இப்படியே போனால் கைது செய்துவிடுவார்கள் என துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வார்னிங் கொடுத்துள்ளனர். உடனடியாக டெல்லிக்கு பறந்த துரைமுருகன், சில முக்கிய புள்ளிகளை சந்தித்துவிட்டு சட்ட ரீதியாக எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என எல்லா பக்கமும் முயற்சி செய்துள்ளார். 

ஆனால் எதுவுமே கைகொடுக்காததால் இறுதியில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய துரைமுருகன், விசாரணைக்கு மகனை அனுப்பி வைப்பது தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார். இருந்தாலும் கதிர் ஆனந்தை கைது செய்து விடுவார்களோ என்ற பதட்டத்துடனேயே தான் துரைமுருகன் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்கின்றனர். பயத்துடன் போன கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணிக்கணக்காக வைத்து கேள்விகளால் துளைத்துள்ளனர்.

உங்களை ஜெயிக்க வைப்பதற்காக தான் பூஞ்சோலை சீனிவாசன் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக சொல்லியிருக்கிறாரே என கேட்டதும், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உடனே சொல்லியுள்ளார் கதிர் ஆனந்த். அவர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு தெரியாது என்ற பதிலே வந்துள்ளது. வழக்கறிஞர்களும் எதை பற்றியும் வாய் திறக்கவே கூடாது என சொல்லி அனுப்பியதாக கூறப்படுகிறது.

நாள் முழுக்க கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த போதும் அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் அந்தப் பக்கம் வரவில்லை. ரெய்டு நடந்த போது கூட திமுக சார்பாக கண்டமே சொல்லவில்லை என துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜி, பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் எல்லாம் ரெய்டு நடந்த போது திமுக தரப்பில் இருந்து கண்டனம் வந்தது. திமுகவின் முக்கிய புள்ளிகள் நேரிலேயே சந்திப்பதற்கு படையெடுத்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் கதிர் ஆனந்த் ரெய்டை சரியாக கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே திமுக வட்டாரத்தில் சொல்கின்றனர்.

எனக்கு ஒரு பிரச்னை என்று வரும் போது ஒருவர் கூட வரவில்லையே என்ற ஆத்திரம் துரைமுருகனுக்கு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே துணை முதல்வர் விவகாரத்திலேயே துரைமுருகனை ஓரங்கட்டுவதாக பேச்சு இருந்த நிலையில், ரெய்டு விவகாரம் அதனை கூடுதலாக பற்றவைத்துள்ளது. யார் இல்லை என்றாலும், மகனை காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே துரைமுருகனுக்கு தற்போது வந்துள்ளது. அதனால் மீண்டும் டெல்லி சென்று கதிர் ஆனந்தை அமலாக்கத்துறை வளையத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான வேலைகளில் துரைமுருகன் தீவிரம் காட்டி வருவதாக சொல்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola