MR Vijayabaskar : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கில் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யபட்டதை தொடர்ந்து, அவரை சிபிசிஐடி போலீஸ் எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த சூழலில் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் என்பவர் கரூர் காவல்துறையிடம் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளதாக ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் 100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை பதிவு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதை தொடர்ந்து கரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.
அடுத்த சில நாட்களிலேயே கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் இதே நிலம் தொடர்பாக மற்றோரு புகாரை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று புகாரில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தான் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, இதனால் இந்த வழக்கில் நம்முடைய பெயர் சேர்க்கபடலாம், நாம் கைதும் செய்யபடலாம் என்பதை உணர்ந்த எம்.ஆர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார், ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், ஜாமீன் மனுவை தள்ளூபடி செய்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ள்தாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்படை அமைத்து எம்.ஆர் விஜயபாஸ்கரை தேடும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருவதாகவும், கடந்த சில நாட்களாகவே அவர் கரூரில் இல்லை என்று சொல்லபடுகிறது.
அண்மையில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டத்தை நடத்தியது அதிமுக, ஆனால் கரூரில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தபடவில்லை, அதற்கு முன்பே எம்.ஆர் விஜயபாஸ்கர் வெளி மாநிலத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் அவரை எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ளதாக வெளியாகும் செய்தி சூட்டை கூட்டியுள்ளது.