MR Vijayabashkar Arrest : கண் அசைத்த செந்தில் பாலாஜி!விஜயபாஸ்கர் அதிரடி கைது!சிக்கலில் கரூர் அதிமுக?
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் என்பவர் கரூர் காவல்துறையிடம் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளதாக ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை பதிவு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து கரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.
அதன் பிறகு கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் இதே நிலம் தொடர்பாக மற்றோரு புகாரை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று புகாரில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வர, முன்னாள் அமைச்சருக்கே தொடர்புடையதாக குற்றச்சாட்டுகள் எழ இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் வழக்கில் தன்னுடைய பெயர் சேர்க்கபடலாம், நாம் கைதும் செய்யபடலாம் என்பதை உணர்ந்து உடனே உஷாரான முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்டிருந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், ஜாமீன் மனுவை தள்ளூபடி செய்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியானது. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த சிபிசிஐடி போலீஸ், தனிப்படை அமைத்து எம்.ஆர் விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வந்தது.
மேலும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டன, அவருக்கு நெருக்கமானவர்களும் விசராணை வலையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்.
ஆனால் சிபிசிஐடி போலீஸ் நெருங்கும் முன்பே சுதாரித்துக்கொண்ட எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூரை விட்டு வெளியேறி, வெளி மாநிலத்திற்கு தப்பி விட்டதாக சொல்லபட்டது.
இந்நிலையில் தான் கேரளாவில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசாரின் தனிப்படை தற்போது கைது செய்துள்ளனர். கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, டிரான்சிட் ஆர்டர் பெற்ற பின், தமிழகத்திற்கு விஜயபாஸ்கரை காவல்துறையினர் அழைத்துவர திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் கரூரை சேர்ந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தலையீடு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரின் கைதுக்கு பின் இருப்பதாக அதிமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்து வருவதால், இந்த கைது சம்பவம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.