Suresh Gopi : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?
மத்திய அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி.யாக மட்டும் தொடர விருப்பம் என நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று, கேரளாவின் முதல் பாஜக எம்பி என்ற புதிய வரலாறு படைத்தார். பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளர் விஎஸ் சுனில்குமாரை விட 74, 686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, இன்று அமைச்சர் பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விரைவில் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவேன் என்றும் சுரேஷ் கோபி தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற கேரளாவை சேர்ந்த பாஜகவின் முதல் எம்.பி., சுரேஷ் கோபி தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழா முடிந்ததும் டெல்லியில் கேரளாவை சேர்ந்த தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “ அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன். ஆனால், பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை. நான் நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளேன். அந்த பணியையும் நான் செய்ய வேண்டும்.
எம்.பி.யாக பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம், நான் எதுவும் கேட்கவில்லை, எனக்கு இந்த பதவி வேண்டாம் என்றேன். விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து விடுபடுவேன் என நினைக்கிறேன். இதனால் திருச்சூர் வாக்காளர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அது அவர்களுக்கே தெரியும். ஒரு எம்.பி.யா நான் அவர்களுக்காக பணியாற்றுவேன். அதே நேரத்தில், நான் ஒப்புக்கொண்ட படங்களிலும் நடிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்