ED-ஐ வைத்து DMK-க்கு ஸ்கெட்ச்! மோடி கோவை விசிட் பின்னணி! OPS ஆசை நிறைவேறுமா? | Modi Coimbatore visit

Continues below advertisement

அமலாக்கத்துறையை வைத்து திமுகவை டார்கெட் செய்யும் வகையில் ஆபரேஷன் தமிழ்நாட்டை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளதாக சொல்கின்றனர். அவர் கோவைக்கு வருவதன் பின்னணியில் முக்கிய காரணங்கள் இருப்பதாகவும், அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டீம் மோடியை சந்திக்க போராடி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது.


பீகார் தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்து தேர்தல் நடக்கவிருக்கும் தமிழ்நாட்டை குறி வைத்து பணிகளை ஆரம்பித்திருக்கிறது பாஜக. அதன் முக்கியப் பகுதியாக வரும் 19ஆம் தேதி கோவைக்கு வருகிறார் பிரதமர் மோடி. இயற்கை விவசாயிகள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் கோவை வருவதாக சொன்னாலும் இந்த பயணத்தில் ஏராளமான அரசியல் கணக்குகளும் அடங்கியிருக்கின்றன. 

2026ல் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளாவை குறித்து வைத்து ‘ஆபரேஷன் சவுத்’ என்ற பெயரில் திட்டங்களை வகுத்து வருகிறது பாஜக.  குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இருக்கிறது பாஜக. அதற்காக ஒருமித்து எண்ணமுடைய கட்சிகள் இணைய வேண்டும் என தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.  

அதுவும் தங்களது ஆஸ்தான அஸ்திரங்களான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி திமுகவை டார்கெட் செய்ய பாஜக திட்டமிட்டிருப்பதாக சொல்கின்றனர். விசாரணையில் உள்ள வழக்குகள், கிடப்பில் போடப்பட்ட வழக்குகளையெல்லாம் தூசிதட்டி திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ‘ஆபரேஷன் TN’ என பெயர் சூட்டியிருக்கிறார்களாம்.  ஏற்கனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்களை எழுப்பி டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி வழக்கு பதிவு செய்ய கோரியிருக்கும் நிலையில், இன்னும் பல வழக்குகளை புலனாய்வு  அமைப்புகள் கையில் எடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இதனை முன் கூட்டியே அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை வைத்து திமுகவை அச்சுறுத்த பார்த்தார்கள். ஆனால், அவர்களால் திமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது S.I.R மூலம் திமுவை அழிக்க பார்க்கிறார்கள். ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் இந்த கட்சி பெயர் திமுக. இது தமிழ்நாடு என பொளந்து கட்டியிருந்தார். முதல்வரின் இந்த பேச்சையும் தமிழக பாஜக தலைவர்கள், டெல்லி தலைமை காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில்தான், பிரதமர் கோவைக்கு வரும்போது நேரடியாக அவர் திமுகவை தாக்கி பேசுவதற்கு ஏதுவாக புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைவர்களிடம் பாஜக தலைமை கோரியுள்ளது. 

தன்னுடைய இந்த கோவை பயணத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். அதோடு, பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் தரப்பிலும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கடந்த முறை பிரதமர் தமிழ்நாடு வரும் போது சந்திப்பதற்காக ஓபிஎஸ் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் கடைசி ஒரு வாய்ப்பாக இந்த முறை பிரதமரிடம் பேசி கூட்டணி கணக்குகளில் ஒரு முடிவுக்கு வரலாம் என நினைப்பதாக சொல்கின்றனர். ஆனால், செங்கோட்டையன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை பிரதமர் சந்தித்தால், அது அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்களை சந்திக்க பிரதமர் மறுப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. பிரதமர் மோடியின் பயணம் திமுக, அதிமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் என சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola