MK Stalin thank Rahul gandhi : ”என் தம்பி ராகுல்” நன்றி சொன்ன ஸ்டாலின்! காரணம் என்ன?
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிடப்படுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாழ்த்தியுள்ள நிலையில், அவரது கனவுகளை நனவாக்க ஒன்றிணைந்து பணிபுரிவோம் என நெகிழ்ச்சியடைந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நாணயத்தை வெளியிடுகிறார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். பிரதமர் மோடி நாணய வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக கருணாநிதி திகழ்ந்தார். அரசியல் தலைவராக முதலமைச்சராக கருணாநிதி ருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார் என்று பாராட்டியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் தமிழ்நாடு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது சிறப்பான வாழ்க்கையை போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ந்தேன். கலைஞர் கருணாநிதியின் சமூகப் பார்வை, மக்களை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை லட்சக்கணக்கான மக்கள் கண்ணியத்துடன் வாழ வழி செய்து கொடுத்தது. அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு மாற்றத்திற்கான லட்சிய பாதையில் சென்றது. அவரது கொள்கைகள் குறித்த தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு தமிழ்நாடு பல்வேறு மாநிலங்களில் முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் மாறியதற்கு காரணமாக அமைந்தது. அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் வாழ்த்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதில் கொடுத்துள்ளார். இதுதொடரபான அவரது சமூக வலைதள பதிவில், ‘கலைஞர் நினைவு நாணய விழாவின் முக்கியத்துவம் பற்றிய வாழ்த்துகளுக்கு எனது சகோதரர் ராகுல்காந்திக்கு மிக்க நன்றி. அவரது கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணிபுரிவோம்” என கூறியுள்ளார்.