MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது, அது காங்கிரஸுக்கும் தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. முக்கியமாக இந்த தேர்தலில் ஆட்சியில் பங்கு என்ற குரல் அதிகம் எழுந்து வருகிறது. எங்களுக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவை நெருக்கி வருகிறது காங்கிரஸ். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வகிக்கும் என சொல்லி புயலை கிளப்பினார். அவரது கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆமோதித்தார்.
அதேபோல் இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார் எம்.பி மாணிக்கம் தாகூர். ஆட்சியில் பங்கு கிடையாது, முதலமைச்சர் ஸ்டாலின் அதில் உறுதியாக இருக்கிறார் என அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுகவினர் சொல்லி வந்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் INDIA TODAY-க்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “ ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது. அது எங்களுக்கும் தெரியும், காங்கிரஸுக்கும் தெரியும். ஆட்சியில் பங்கு என்பது கூட்டணியை உடைப்பதற்காக இடையில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் சதி” என பதிலடி கொடுத்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக வெளியான தகவல் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார்.
ஏற்கனவே தொகுதி பங்கீடு விஷயத்தில் 2 கட்சிகளுக்கும் இடையே உரசல் வந்துள்ளது. திமுக இன்னும் பேச்சுவார்த்தைக் குழுவை அறிவிக்காதது எங்களது தொண்டர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என கிரிஷ் சோடங்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து கூட்டணி கட்சிகளுடன் பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பேச்சுவார்த்தை நடக்கும் என திமுக அறிவித்தது. அதேபோல் ஆட்சியில் பங்கு கோரிக்கைக்கு ஸ்டாலின் முடிவுகட்டியுள்ள நிலையில் காங்கிரஸின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி வந்துள்ளது.























