தூக்கியெறியும் ஸ்டாலின்! கதிகலங்கும் 6 மா.செ.க்கள்! திமுகவின் அடுத்தடுத்த அதிரடி

Continues below advertisement

யாருக்கும் கட்டுப்படாமல் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் 6 பேரிடம் இருந்து உடனடியாக பதவியை பறிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். நமக்கு வேண்டியவர்களுக்கு சீட் வாங்கி கொடுத்துவிடலாம் என நம்பிக் கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் தலை மீது இடியை இறக்கியிருக்கிறது உடன்பிறப்பே வா திட்டம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் திமுகவில் வேலைகள் வேகமெடுத்துள்ளன. ஓரணியில் தமிழ்நாடு, உங்களுடன் ஸ்டாலின் திட்டங்களை கையில் எடுத்து திமுகவினர் களப்பணியில் இறங்கியுள்ளனர். அதே நேரத்தில் உடன்பிறப்பே வா திட்டத்தை கையில் எடுத்து கட்சிக்குள் களையெடுக்க ஆரம்பித்துள்ளார் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின். 

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த மாவட்டச் செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகளை தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். இதில் எந்தெந்த நிர்வாகிகள் மீதெல்லாம் புகார்கள் குவிந்ததோ அதையெல்லாம் லிஸ்ட் எடுத்து அவர்களை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மெத்தனமாக, சரியாக செயல்படாத நிர்வாகிகளை நீக்கும் வேலைகள் அறிவாலயத்தில் வேகமாக நடந்து வருகின்றன.

அதன் முதற்கட்டமாக, கோவை மாநகர் மாவட்ட செயலாலராக பல ஆண்டுகளாக இருந்த நா. கார்த்தி அதிரடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுகவை இந்த தேர்தலில் பின்னுக்குத் தள்ளி கொங்கை தங்களது கோட்டையாக மாற்ற, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை தேர்தல் பொறுப்பாளராக திமுக நியமித்திருக்கும் நிலையில், நா.கார்த்தி நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்பாலாஜிக்கு உரிய ஒத்துழைப்பு தராதது, தன்னைத் தாண்டி மாநகர் திமுகவில் எதுவும் செய்ய முடியாது என்று வாய்த் துடுக்காக பேசி வந்தது உள்ளிட்ட புகார்களில் அவர் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே மாதிரி, தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரமும் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்தநிலையில் சரியாக செயல்படாமல், தொடர்ந்து புகார்களில் சிக்கியுள்ள ஆறு மாவட்டச் செயலாளர்களிடமிருந்து அந்த பொறுப்பை பறிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்பதால், திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் பதற்றத்தில் இருந்து வருகின்றனர். தேர்தல் முடியும் வரை தாங்களே மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக வலம் வந்து எப்படியாவது தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுத்துவிடலாம் என நம்பிக்கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் தலைமீது இந்த உடன்பிறப்பே வா திட்டம் இடியாய் வந்து இறங்கியிருக்கிறது.

அதேபோல் சென்னையில் அமைப்பு ரீதியாக உள்ள 6 மாவட்டங்களை ஏழாக பிரித்து சென்னை தெற்கு என்ற புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்தும் டெல்டா மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது பற்றியும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்ட அமைப்புகளிலும் விரைவில் மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக சொல்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மெத்தனமாக இருக்கும் நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுக்கும் வகையில் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola