Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை ஆதரித்து மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணி சார்பாக மம்தா களத்தில் இறங்கவுள்ளது பாஜகவினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் களமிறங்கிய ராகுல்காந்தி, 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தினார். ஒரே நேரத்தில் இரண்டு தொகுதி எம்.பியாக இருக்க முடியாது என்பதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக முடிவெடுத்தார் ராகுல்காந்தி. இறுதியில் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறங்குகிறார். பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலுக்கு வருவது இதுவே முதல்முறை என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தநிலையில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வயநாடு தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என கடந்த ஆண்டே முதல் ஆளாக குரல் கொடுத்தவர் மம்தா பானர்ஜி. சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் மம்தா பானர்ஜியை நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை.
மக்களவை தேர்தல் சமயத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தனித்து களமிறங்கும் முடிவை எடுத்தார் மம்தா. ஆனால் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக உறுதி செய்தார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார்.
இந்தநிலையில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்யவிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணி வலுவடைவதற்கு மம்தா பானர்ஜியின் பிரச்சாரம் முக்கிய பங்காற்றும் என்று சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.