உடனே CALL பண்ண பிரதமர்! உடல்நலத்தை விசாரித்த CM! கார்கேவுக்கு என்னாச்சு?
இதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்கேவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் பற்றி விசாரித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினும் கார்கே உடல்நலம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தசரா விடுமுறைக்காக செப்டம்பர் 29ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். இந்தநிலையில் அதற்கு அடுத்த நாளே அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் அவருக்கு இதயத்தில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதயத் துடிப்பில் மாறுபாடுகள் இருந்ததால் நள்ளிரவே அறுவை சிகிச்சை செய்து பேஸ்மேக்கர் கருவி பொருத்தியுள்ளனர். கார்கேவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை கிளப்பியது.
இந்தநிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாகவும் மல்லிகார்ஜூன கார்கே இன்று வீடு திரும்புவார் என்றும் கார்கேவின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கார்கேவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்க பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினும் கார்கே உடல்நிலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் கார்கே முழுமையாக குணமடைய வாழ்த்துகிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும், தனது பணிகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருக்கிறார் என்று அறிந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.